எம்.ஜி.ஆரை விட முதல்வர் ஸ்டாலினுக்கு தான் பெண்களின் ஆதரவு அதிகம்! இயக்குநர் கரு.பழனியப்பன் பேச்சு!
சென்னை: தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரை விட முதல்வர் ஸ்டாலினுக்கு தான் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்பே தனது எழுத்தால் சொந்த வீடும், காரும் வாங்கியவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடசென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கரு.பழனியப்பன் பேசியதாவது;

கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்பே தனது எழுத்தால் சொந்த வீடு வாங்கியவர். திராவிட இயக்க தலைவர்களில் முதலில் கார் வாங்கியவர் கலைஞர் தான். நடிகராக சிவாஜி 250 ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்தில், எழுத்தாளராக, வசன கர்த்தாவாக 500 ரூபாய் சம்பளம் வாங்கியவர் கருணாநிதி. அவர் 500 ரூபாய் சம்பளம் வாங்கிய காலத்தில் தங்கத்தின் விலை கிராம் 10 ரூபாய் தான். கருணாநிதியை செல்வந்தனாக மாற்றியது தமிழ் சினிமா தான். பிறகு தான் அவர் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
கருணாநிதியை பொறுத்தவரை மக்களை அறிந்து மக்களோடு நேரடி தொடர்பிலிருந்தவர். கருணாநிதி மறைந்த போது தமிழகத்தில் கட்சி சார்பின்றி அனைத்து மகளிரும் கண்ணீர் வடித்தார்கள். ஏனென்றால் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொண்டு வந்தவர் என்பதை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்கிறார். கருணாநிதி வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடுமையாக உழைக்கிறார். பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை முதலில் அறிமுகபடுத்தியவர் நமது முதல்வர் தான்.
இப்போது எம்.ஜி.ஆரை விட முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. அதற்கு இன்றைய கூட்டமே சாட்சி. இனி எத்தனை ஆட்சி வந்தாலும் மகளிர்க்கு இலவச பேருந்து திட்டத்தை ரத்து செய்ய முடியாது. இந்தியாவில் எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியை திமுகவிற்கு தமிழ்நாட்டு பெண்கள் பெற்றுத் தருவார்கள். இவ்வாறு இயக்குநர் கரு.பழனியப்பன் பேசினார்.












Click it and Unblock the Notifications