உண்மைய சொன்னா ‘பி’ டீம்னு சொல்றாங்க! பாஜகவுக்கு நேர் எதினாவர்கள் நாங்கள்! ஆவேசமான பா.ரஞ்சித்
சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் பட்டியலின மக்களுக்கான உரிமை குறித்து பேசினால் 'பி' டீம் என்று சொல்கின்றனர் எனவும், ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என்றார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் சனிக்கிழமையான இன்று 20 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறும் என இயக்குனர் பா.ரஞ்சித் அறிவித்தார்.

சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி, இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ஆம்ஸ்ட்ராங் இறந்ததற்காக வீர வணக்கம் செலுத்துவது, நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது விசிக மேடையில் மட்டும் தான் எனவும், பணம் கொடுத்து நடத்தும் எந்த நிகழ்வுகளிலும், பேரணிகளிலும் பங்கேற்க வேண்டாம் என அக்கட்சியினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திட்டமிட்டபடி ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டலில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணி நடைபெற்றது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி தினேஷ், வில்லன் நடிகர் தீனா, தலித் கூட்டமைப்பினர், சமூக செயல்பாட்டாளர்கள், பல கட்சிகளின் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ரமடா ஹோட்டல் அருகே தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானம் வரை நடைபெற்றது. தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டமும் நடந்தது. இந்த கூட்டத்தில் பா.ரஞ்சித் உள்ளிட்ட திரைக்கலைஞர்கள் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். இதற்காக எழும்பூரில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நினைவேந்தல் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்ளக்கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார், இதன் காரணமாக அந்த கட்சியினர் கலந்து கொள்ளவில்லை. அதே நேரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பேரணி நிறைவு பெற்றது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ரஞ்சித்," பட்டியலின மக்களுக்கான உரிமை குறித்து பேசினால் பி டீம் என்று சொல்கின்றனர். சமூகத்தில் நோய் இருக்கிறது என்று சொன்னால் இவன் நோயை பரப்புகிறான் என்று கூறுகின்றனர். சட்ட மேதை அம்பேத்கரின் கருத்தின் அடிப்படையில் ஒருநாள் என் மக்கள் அனைவரும் ஒன்று திரளுவார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் உண்மையான குற்றவாளிகளை கண்டறியாவிட்டால் காவல்துறைக்கு நிர்பந்தத்தை உருவாக்குவோம். நாம் ஒற்றுமைக்கு விலை பேசுகின்றனர். பாஜகவிற்கு எப்போதும் எதிரானவர்கள் நாங்கள்." என்றார்.












Click it and Unblock the Notifications