தீபாவளி பண்டிகை: பயணிகளுக்கு ஸ்வீட் நியூஸ் கொடுத்த ரயில்வே.. டிக்கெட் கன்ஃபார்ம் ஆக வாய்ப்பு அதிகம்
சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழகத்தில் இயக்கப்படும் சதாப்தி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 32 ரயில்களில் கூடுதலாக தலா ஒரு பெட்டிகள் இணைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இன்று முதல் வரும் 4 ஆம் தேதி வரை இயக்கப்படும் ரயில்களில் இந்த கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாட சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் ஆயத்தமாகிவிட்டனர். குறிப்பாக சென்னையில் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முதலே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, கோவை என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகள், ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. சிறப்பு பஸ்கள், ரயில்கள் அறிவிக்கப்பட்டு அதிலும் சில நிமிடங்களிலும் டிக்கெட்டுகள் காலியாகிவிட்டன. நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கூட அனைத்தும் காலியாகிவிட்டன.
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் வைத்து இருப்பவர்கள் டிக்கெட் கன்பார்ம் ஆக வாய்ப்புள்ளதா? என அடிக்கடி பி.என்.ஆர் ஸ்டேடசை செக் செய்து கொண்டே இருப்பதையும் பார்க்க முடிகிறது. வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் அதிகம் உள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில்தான் ரயில் பயணிகளுக்கு தித்திப்பான செய்தி ஒன்றை ரயில்வே வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னையில் இருந்து தூத்துக்குடி, ஏற்காடு, கோவை உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் 32 ரயில்களில் கூடுதலாக தலா ஒரு ரயில் பெட்டி இணைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
வெயிட்டிங் லிஸ்ட் அதிகமுள்ள ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், காரைக்கால், ஏற்காடு உள்பட 32 ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது.
* சென்ட்ரல்- கோவை இடையேயான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை மற்றும் நவம்பர் 3 ஆம் தேதி இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு சேர் கார் பெட்டி இணைக்கப்படும்.
* சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் 1 ஆம் தேதி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டியும், மறுமார்க்கத்தில் நவ.3 ஆம் தேதி நாகர்கோவில் - சென்னைக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் ஒரு பெட்டியும் கூடுதலாக இணைக்கப்படும்.
* சென்னை எழும்பூர் - தூத்துக்குடிக்கு நாளை (அக்.30) , நவம்பர் 1, 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.
* தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 29 மற்றும் 31, நவம்பர் 2 ஆம் தேதி மற்றும் 4 ஆம் தேதிகளில் இயக்கப்படும் முத்துநகர் ரயிலில் ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.
*சென்னை எழும்பூர் - காரைக்காலுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு பெட்டியும், மறுமார்க்கத்தில், வரும் 2 மற்றும் 3 ஆம் தேதியில் ஒரு பெட்டியும் இணைக்கப்படும்.
* சென்னை எழும்பூர் - தஞ்சாவூருக்கு இன்றும் மற்றும் நாளையும் வரும் நவ.1, 2, ஆகிய தேதிகளில் இயக்கப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டி இணைத்து இயக்கப்படும்.
* மறுமார்க்கத்தில் தஞ்சாவூர் - சென்னை எழும்பூருக்கு நாளை மற்றும் நாளை மறுநாளும் அதேபோல, நவம்பர் 2 ஆம் தேதி மற்றும் 3 தேதிகளில் இயக்கப்படும் ரயிலில் ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும். மொத்தம் 32 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட உள்ளது.
இன்று முதல் அடுத்த மாதம் 4 ஆம் தேதி வரை பெரும்பாலான ரயில்களில் தலா ஒரு பெட்டி கூடுதலாக இணைத்து இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் ரயில்வே எடுத்து இருக்கும் இந்த முடிவு பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications