சென்னையில் இருந்து செல்வோர் கவனத்திற்கு.. ஓஎம்ஆர், ஈசிஆர் சாலையில் செல்லுங்க.. சிவசங்கர் வேண்டுகோள்!
சென்னை: தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரின் எண்ணிக்கை 2.39 லட்சமாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அதேபோல் சென்னையில் இருந்து சொந்த காரில் பயணிப்போர் ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளில் பயணிக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை மறுநாள் தீபாவளி கொண்டாட உள்ள நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சாமானிய மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மக்கள் குவிந்து வருகின்றனர். அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மட்டும் 3.5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்திருப்பதாக தமிழக போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சுமார் 2.39 லட்சம் பயணிகள் தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்திருக்கின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் பொதுமக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்து வருகின்றனர். அதற்கேற்ப சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
அதன்பின் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகளாக 760 பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று மட்டும் 1.28 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர். இன்னும் ஒரு லட்சம் பேர் பயணிக்கக் கூடிய சூழலை எதிர்நோக்குகிறோம்.
கடந்த ஆண்டை போலவே தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து இயக்கி வருகிறோம். இரவு நேரத்தில் இயங்காத மாநகர அரசு பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதனால் எந்த அளவில் பொதுமக்கள் வந்தாலும், சமாளிப்பதற்கான தேவையான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. முன்பதிவு என்பது கடந்த ஆண்டை விட அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு 1.68 லட்சம் பேர் முன்பதிவு செய்து பயணித்திருந்தனர். ஆனால் தற்போது 2.39 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் 2 நாட்கள் மக்கள் பயணிக்க உள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் சுமார் 52 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். எனவே தனியார் பேருந்துகளில் பயணித்து வந்தவர்கள், அரசுப் பேருந்துகளில் பயணிக்க தொடங்கி இருப்பதையே இது காட்டுகிறது.
தொடர்ந்து பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அதேபோல் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. திருச்சி செல்லும் சாலையில் பாலாறு பாலத்தில் மட்டும் போக்குவரத்து நெரிசல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கார்களில் சொந்த ஊர்களுக்கு செல்வோர் ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகளை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல் முன்பதிவு செய்த பேருந்துகளில் மெசேஜ்கள் செல்வது சரியாக இல்லை என்று சில புகார்கள் வந்துள்ளன. ஆனால் அவர்களை ஏற்றிக் கொண்டு செல்வதற்காக 30 நிமிடங்கள் தாமதமாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்பதிவு செய்தவர்கள் பேருந்தை தவறவிட்டால், அடுத்தப் பேருந்தில் பயணிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications