"அதிமுக + தவெக இணைந்தால் மிகப்பெரிய சக்தி உருவாகும்.. இதுவே விஜய் விருப்பம்" - ஆதவ் அர்ஜுனா பளிச்!
சென்னை: "அதிமுகவைச் சேர்ந்த 90 சதவீத தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி வர ஆரம்பித்து விட்டார்கள். அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இணையும்போது ஒரு மிகப்பெரிய சக்தி உருவாகும். முதல்வர் விஜய்யின் விருப்பமும் இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்பதுதான்." என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலரும் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் ஏராளமானோர் தவெகவில் இணையும் விழா நடைபெற்றது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "தவெக தலைவர் விஜய் தன்னுடைய பிரச்சாரத்தால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கினார். தற்போதைய சூழலில் அதிமுகவும் திமுகவும் ஒன்றாகிவிட்டன. அதனால் தான் 90 சதவீதம் அதிமுகவினர் தவெகவிற்கு வருகின்றனர்.
ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக வேறு ஒரு திசையை நோக்கி போகும்போது, முதலில் குரல் கொடுத்தவர் அமைச்சர் செங்கோட்டையன். ஆனால், 50 வருடங்களாக அதிமுகவில் பயணித்த ஒரு அனுபவசாலி அக்கட்சியால் தூக்கி எறியப்பட்டார். இது செங்கோட்டையனின் தவறு கிடையாது. அதிமுக தலைமையின் தவறு.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செங்கோட்டையனை அன்போடு வரவேற்றார். இன்றைக்கு அவர் சட்டமன்றத்தில் அவை முன்னவராகவும், அமைச்சராகவும் உள்ளார். எனவே, தவெகவிற்கு வந்த அதிமுக தொண்டர்களை விஜய், மகிழ்ச்சியோடு பார்த்துக் கொள்வார்.
அதிமுகவைச் சேர்ந்த 90 சதவீத தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி வர ஆரம்பித்து விட்டார்கள். அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இணையும்போது ஒரு மிகப்பெரிய சக்தி உருவாகும். முதல்வர் விஜய்யின் விருப்பமும் இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்பதுதான்.
அதேசமயம் கட்சியில் சேர்ந்தவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மற்ற கட்சிகளை போன்று பதவி தருவதாகக் கூறி வியாபாரம் செய்யக்கூடிய கட்சி தவெக கிடையாது. எங்கள் தலைவர் உங்களுக்கு கூடிய விரைவில் பொறுப்பு கொடுப்பார்.
தவெக ஆட்சி அமைந்து 30 நாட்களில் மின்சாரத்துறை சரியில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், திமுக ஆட்சியில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறையை ஏன் அப்போதையை முதலமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுத்தார்? காலம் காலமாக வேலை பார்த்து வந்த திமுக நிர்வாகிகளுக்கு இந்த பதவியை வழங்காதது ஏன்?
எதற்காக என்றால், மொத்தமாக கொள்ளையடித்து அவர்களது குடும்பத்திற்கு கொடுக்கத்தான். கொள்ளை அடிப்பதற்காகவே அமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் உருவாக்கினார். இந்த 30 நாளில் ஒரு மெகாவாட்டிலாவது மின்சாரத்துறை அமைச்சர் ஊழல் செய்தார் என்று உங்களால் சொல்ல முடியுமா?" என்று பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications