“சிங்கப்பெண் மாதிரி ஒரு திட்டத்தை வச்சுகிட்டு..” காவல் நிலையங்கள் குறித்து கவலை தெரிவித்த நீதிமன்றம்
மதுரை: தமிழ்நாட்டில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போன்ற ஒரு அமைப்பை வைத்துக்கொண்டு, காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யாமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்திருக்கிறது.
சிங்கப்பெண் அதிரடிப்படை பெரிய அளவில் கவனம் பெற்றிருந்த நிலையில், தமிழக காவல்துறை குறித்து நீதிமன்றம் இப்படி பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

என்ன பஞ்சாயத்து?
தென்காசி மாவட்டத்தில், வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய விவகாரம் காவல் நிலையம் வரைக்கும் வந்திருக்கிறது. வழக்கமா இதுபோன்ற கேஸ் வந்தால் என்ன செய்வார்கள்? வரதட்சணை கேட்டவர்களை காதோடு சேர்த்து ரெண்டு அறைவிட்டு.. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்து.. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள். ஆனால், தென்காசி காவல் நிலையம் கொஞ்சம் வித்தியாசமாக ரியாக்ட் செய்திருக்கிறது.
கட்டப்பஞ்சாயத்து செய்த போலீசார்
அதாவது, கல்யாணத்தை நிறுத்தியவர்களை கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்து.. கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறது. வரதட்சணை கொடுமையால் எத்தனையோ பெண்கள் விபரீத முடிவுகளை எடுத்தும் கூட.. அதில் சம்பந்தப்பட்டவர்களை நீதியின் முன் நிறுத்தாமல், கட்டப்பஞ்சாயத்து செய்தது, பெண் வீட்டார் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கின்றனர்.
வழக்கு விசாரணை
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "சட்டத்தை காப்பாற்ற வேண்டிய காவல் நிலையங்கள் சிவில், குடும்ப விஷயங்களில் நேரடியாக தலையிட்டு தீர்ப்பு சொல்லும் கட்டப்பஞ்சாயத்து கூடாரங்களாக மாறுவது சட்ட ஒழுங்குக்கு உகந்தது கிடையாது. FIR கூட போடாமல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டுவதையும், ஒருதலைப்பட்சமாக செயல்படுவதையும் காவல்துறை நிறுத்த வேண்டும்.
ரூ.1 லட்சம் அபராதம்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் போன்று ஒருபுறம் இருக்க.. இன்னொரு பக்கம் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பது வருத்தம் அளிக்கிறது. எனவே ஆலங்குளம் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தின் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது" என்று உத்தரவிட்டிருக்கின்றனர்.
முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை குறித்து நீதிமன்றம் இவ்வாறு பேசியிருப்பது தவெக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications