ராட்சத மலைப்பாம்பு வீட்டில் புகுந்ததுமே.. கேஷூவலாக உபசரிக்கும் மக்கள்! எங்கு தெரியுமா? விநோத பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகிலேயே மிக நீளமான பாம்பு வகை எது தெரியுமா? அதுதான் "ரெடிகுலேட்டட் பைதான்" என்று சொல்லப்படும் வலைவடிவ மலைப்பாம்பு. சுமார் 20 முதல் 28 அடி நீளம், நூற்றுக்கணக்கான கிலோ எடையும் வளரக்கூடிய இந்த ராட்சத பாம்புகளின் உடலமைப்பும், அவை வேட்டையாடும் குணமும், அவற்றைப் பற்றி உலக மக்கள் வைத்துள்ள நம்பிக்கைகளும் நம்மை நிஜமாகவே வாயடைக்க வைக்கும் சுவாரஸ்யங்களாகும்.. இதனை இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!

பொதுவாக மலைப்பாம்புகளுக்கு விஷம் கிடையாது. அவை இரையை கடித்து கொல்வதுமில்லை. மாறாக, தன்னுடைய வலுவான உடலால் இரையை இறுக்கமாக சுருட்டி வளைத்துக் கொள்ளும். இரை மூச்சுவிடும் ஒவ்வொரு முறையும் தன் உடலின் பிடியை இன்னும் இன்னும் இறுக்கிக்கொண்டே போகும். இதனால் இரையின் ரத்த ஓட்டமும் மூச்சும் முழுமையாக நின்று, இதயம் செயலிழந்தவுடன் அதை அப்படியே விழுங்கத் தொடங்கிவிடும்.

Python

அதுவும் தன்னுடைய தலையின் அளவை விட பல மடங்கு பெரிய விலங்குகளான மான், காட்டுப்பன்றி, முதலை போன்றவற்றை இவைகளால் எப்படி விழுங்க முடிகிறது தெரியுமா? இதற்குப் பின்னால் சுவாரஸ்யமான அறிவியல் காரணம் இருக்கிறது.

வேட்டையாடும் பாம்புகள்

மலைப்பாம்புகளின் கீழ் தாடை எலும்புகள், மனிதர்களை போல அல்லாமல் நெகிழ்வான தசைநார்களால் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் விழுங்கும்போது தாடைகளை பக்கவாட்டிலும், கீழ்நோக்கியும் அகலமாக விரித்துக் கொள்ளும் வசதி இந்த பாம்புகளுக்கு கிடைக்கிறது.

மேலும், இவற்றின் முகத்தில் மூக்கிற்கு அருகில் "பிட் ஆர்கன்ஸ்" எனப்படும் சிறப்பு துளைகள் உள்ளன. இவை அகச்சிவப்பு கதிர்களை உணரும் திறன் கொண்டவை. இதன் உதவியால், கும்மிருட்டிலும்கூட அருகிலுள்ள விலங்குகளின் உடல் வெப்பத்தை வைத்தே அவை எங்கே இருக்கின்றன என்பதை கண்டுபிடித்து லபக்கென வேட்டையாடி விடுமாம்.

ஒரு பெரிய விலங்கை விழுங்கிய பிறகு, மலைப்பாம்பின் செரிமான உறுப்புகள் மற்றும் இதயம் தற்காலிகமாகப் பல மடங்கு பெரிதாகின்றன. இரையை செரிக்க மிகவும் வீரியமிக்க செரிமான அமிலங்கள் உடம்பில் சுரக்கின்றன. எலும்புகள் உட்பட அனைத்தையும் செரித்து முடிக்க இவற்றுக்குச் சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை ஆகுமாம்.. அதுவரை இவை ஒரே இடத்தில் அசையாமல் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுமாம்..

கலாச்சார நம்பிக்கைகள்

ஒருமுறை பெரிய இரையை விழுங்கிவிட்டால், அடுத்த சில மாதங்களுக்கு இவற்றுக்கு உணவு தேட வேண்டிய அவசியமே இருப்பதில்லை.

இத்தகைய மலைப்பாம்புகளை சுற்றிப் பல்வேறு உலக நாடுகளில், கலாச்சார நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

உதாரணத்துக்கு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டின் ஓயிடா என்ற நகரில், முழுக்க முழுக்க, ராஜ மலைப்பாம்புகளுக்காகவே ஸ்பெஷலாக ஒரு கோவிலே உள்ளது. இங்கு "வூடூ" ஆன்மீக வழிபாட்டின் ஒரு பகுதியாக மலைப்பாம்புகள் தெய்வமாக வணங்கப்படுகின்றன.

வீட்டில் வந்த மலைப்பாம்பு

இந்த கோவிலில் சுமார் 50க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள் ஹாயாக வலம் வருகிறதாம்.. இந்த பாம்புகளுக்கு கோவிலுக்குள் உணவு வழங்கப்படுவதில்லை. அவை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை நகருக்குள் சுதந்திரமாக வேட்டையாடத் திறந்துவிடப்படும். இரவு நேரங்களில் இந்த மலைப்பாம்புகள் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்தாலும், அவர்கள் பயந்து அலறுவதில்லையாம்.. தங்கள் வீட்டுக்குத் தெய்வமே வந்துவிட்டதாகக் கருதி உபசரித்து, மறுநாள் மரியாதையுடன் கோவிலில் கொண்டு வந்து விடுவார்களாம்.

இங்கு தவறுதலாக ஒரு மலைப்பாம்பு காரில் அடிபட்டு இறந்துவிட்டால், அதற்கு மனிதர்களை போலவே சவப்பெட்டி செய்து, பூசாரிகள் முன்னிலையில் முறைப்படி இறுதிச் சடங்கு செய்யப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் சோடிலோ மலைப்பகுதியிலும் ஒரு ஸ்பெஷாலிட்டி உள்ளது.. இங்கு மிகப்பழமையான குகை வழிபாட்டுத் தளம் ஒன்றை ஒஸ்லோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஷீலா கோல்சன் என்பவர் கண்டுபிடித்துள்ளார்..

"மலைப்பாம்பு" தலை வடிவில்

இங்குள்ள ஒரு ரகசியக் குகைக்குள் சுமார் 6 மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்ட ஒரு பிரம்மாண்டப் பாறை, மனிதர்களால் செதுக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பள்ளங்களுடன் அப்படியே ஒரு பெரிய "மலைப்பாம்பு" தலை வடிவில் காட்சியளிக்கிறதாம்.. அதுமட்டுமல்ல, சூரிய வெளிச்சம் இதன் மீது படும்போது பாம்பின் செதில் போன்ற தோற்றத்தையும், இரவு நேர நெருப்பு வெளிச்சத்தில் அந்தப் பாம்பு நகர்வது போலவும் தெரியுமாம்.

தெய்வத்தின் குழந்தைகள்

நைஜீரியாவின் 'இக்போ' பழங்குடி மக்களும் மலைப்பாம்புகளை தங்களின் தெய்வத்தின் குழந்தைகளாகக் கருதுகிறார்கள். இவர்களின் கலாச்சாரப்படி, மலைப்பாம்பைக் கொல்வது மிகப்பெரிய பாவமாகும். யாராவது ஒரு மலைப்பாம்பைக் கொன்றுவிட்டால், அழுது, துக்கம் அனுசரித்து, பாரம்பரிய முறைப்படி அடக்கம் செய்வார்கள்.. இல்லாவிட்டால் அந்த கிராமத்திற்கே சாபம் உண்டாகும் என்பது நம்பிக்கையாகும்.

மொத்தத்தில், பார்ப்பதற்கே மிரட்டலாக இருக்கும் இந்த மலைப்பாம்புகள் காடுகளின் ஆபத்தான வேட்டைக்காரர்கள் மட்டுமல்ல, பல நாடுகளின் கலாச்சாரத்தோடு பிணைந்த ஆன்மீக விசித்திரங்களும் கூட.!!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+