திருப்பூர் காக்காபள்ளம் சாலை விபத்தில் 6 பேர் பலி.. டேங்கர் லாரி - கார் நேருக்கு நேர் மோதல்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி வருகிறது.. இதுதொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
விஜயமங்கலம் சாலையில் அமைந்துள்ள காக்காபள்ளம் என்ற இடத்தில், அதிவேகமாக வந்த காரும் எதிரே வந்த டேங்கர் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன... இதில் காரில் பயணித்த 2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தின் சத்தம் கேட்டு ஓடிவந்த பகுதி மக்கள், காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒருவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இப்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்துக்குள்ளானவர்கள் யார், அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மற்றும் எங்கிருந்து புறப்பட்டு வந்தார்கள் என்பது போன்ற முழு விவரங்களையும் கண்டறியும் பணியில் போலீசார் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து நடந்த விதம் குறித்து முதற்கட்ட தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.. கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் மீது மோதியதா அல்லது லாரியின் டிரைவர் காரின் மீது மோதினாரா என்ற கோணத்தில் ஊத்துக்குளி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே விபத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 6 பேரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications