உட்டாலங்கடி கிரி கிரி! சைதாப்பேட்டை வடகறி! Vadacurry செய்வது எப்படி?
சென்னை: இட்லி, தோசைக்கு ஏற்ற வடகறியை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த வடகறி ரெசிபி சைதாப்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் மிகவும் பிரபலம் என்பார்கள்.
இட்லி, தோசை, சப்பாத்திக்கு சதா சாம்பார், சட்னி வைக்கிறீர்களா? சூப்பரான வடகறி ரெசிபியை எப்படி செய்வது என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு- 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 2
பச்சை மிளகாய் 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
சோம்பு- 1 ஸ்பூன்
பட்டை, கிராம்பு- சிறிது
கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு- சிறிது
பூண்டு- 5 பல்
காய்ந்த மிளகாய்- 2
எண்ணெய்- சிறிது
செய்முறை
கடலை பருப்பை நன்கு கழுவி 2 மணி முதல் 3 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
ஊறியதும் கடலைப் பருப்புடன் சிறிது உப்பு, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இட்லி தட்டில் எண்ணெய் தடவியோ அல்லது துணியை வைத்தோ, கடலை பருப்பு மாவை தட்டையாக வைத்து ஆவியில் வேக விடவும்.
நன்கு வெந்ததும், ஆற வைத்து கைகளால் உதிர்த்து கொள்ளலாம். இல்லாவிட்டால் மிக்ஸில் பல்ஸ் மோடில் ஓட விட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சோம்பு தாளித்து கறிவேப்பிலை போடவும். பிறகு பட்டை, கிராம்பு போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போடவும்.
அது பொன்னிறமாக வெந்ததும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும், அது பச்சை வாடை போனதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு உப்பு (கடலை பருப்பு மாவில் உப்பு சேர்த்திருப்பதால் பார்த்து சேர்க்கவும்), மஞ்சள் தூள், சேர்த்து வதக்கவும்.
பின்னர் உதிர்த்து வைத்த கடலை பருப்பை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்!
விருப்பப்பட்டால் தக்காளியையும், பச்சை மிளகாயை குறைத்துக் கொண்டு, சிறிது மிளகாய் தூள், கரம் மசாலாவையும் காரத்திற்கு தகுந்தாற்போல் சேர்க்கலாம். இல்லாவிட்டால் பச்சை மிளகாயே போதுமானது.













Click it and Unblock the Notifications