"மகன் உன்னை முடிச்சிடுவான்".. ஜோதிடர் சொன்னதுமே கசாப்புக் கடை கத்தியுடன் கிளம்பிய தேனி அரசியல்வாதி
தேனி: தேனி அல்லிநகரம் பகுதியில் 2023ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த சம்பவம் இது.. 20 வயது ஸ்ரீகாந்த் என்ற இளைஞர், ஆட்டோ ஓட்டியாவது தன்னுடைய அம்மாவை காப்பாற்றி விட வேண்டும் என்று நினைத்திருந்தார்.. ஆனால், அவரது நிலைமை மிகக்கொடூரமாக முடிந்துவிட்டது.. இந்த வழக்கு தமிழகத்தையே உலுக்கியெடுத்த நிலையில், இப்போது சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் பல்வேறு தகவல்கள் அம்பலமாகி உள்ளன..!!
தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் வேந்தர் பாலா.. 49 வயதாகிறது.. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தேனி மாவட்ட தலைவரான இவர், பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி பாஜக அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

தேனி அரசியல்வாதி
இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், ஸ்ரீகாந்த் என்ற மகனும் இருந்தனர். சொகுசாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவராம் பாலா.. அதுமட்டுமல்ல, பெண்கள் மீது சபலமும் இவருக்கு உள்ளதாம்.. வேந்தர் பாலாவுக்கு மொத்தம் 3 கல்யாணங்கள் நடந்துள்ளன.. ஆனாலும், 3 மனைவிகளையும் விட்டுவிட்டு, அதே பகுதியை வசித்து வந்த இன்னொரு பெண்ணுடன், தனியாக வாழ ஆரம்பித்தார் பாலா.
கணவன் கைவிட்டதால் முதல் மனைவி ராஜலட்சுமியும், மகன் ஸ்ரீகாந்தும் கையில் காசில்லாமல், , குடும்பம் நடத்தக்கூட வழியில்லாமல் தவித்து வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், தங்களை இப்படி நடுத்தெருவில் நிற்கவைத்த அப்பாவிடமே சென்று நியாயம் கேட்டுள்ளார்..
சொத்துக்களை கொடுங்க
"எங்களை ஏன் ஏமாற்றிவிட்டு போனீங்க? வீட்டு கஷ்டம் அதிகமாகிவிட்டது.. உங்கள் பெயரிலுள்ள சொத்துக்களை எங்களுக்கு எழுதி கொடுங்க" என்று ஸ்ரீகாந்த் கேட்டுள்ளர்... மகன் சொத்து பற்றி பேசியதுமே பாலாவுக்கு கோபம் வந்தது.. இதனால் தந்தை - மகனுக்கும் அடிக்கடி கைகலப்புகள் வரை நடந்துள்ளன.
இப்படிப்பட்ட சூழலில், பாலா ஒரு ஜோதிடரை அணுகி தன்னுடைய ஜாதகத்தை காட்டியுள்ளார். அந்த ஜோதிடரோ, "உன் உயிருக்கு உன் சொந்த மகனாலேயே ஆபத்து இருக்கிறது" என்று சொல்லியுள்ளர்..
ஏற்கனவே மகனை கண்டாலே ஆத்திரப்பட்டு வந்த பாலா, ஜோதிடர் இப்படி சொல்லிவிடவும் இன்னும் ஆவேசமும், வெறுப்பும் மகன் மீது உண்டானது.. "மகன் என்னை முடிப்பதற்குள், நான் அவனை முடித்துவிடுகிறேன்" என்று முடிவு கட்டினார்.. மகனை கொல்வதற்காக, நண்பர்களான முல்லைநகர் கருப்பையா (கருப்பசாமி) மற்றும் தேனி அலெக்ஸ்பாண்டியன் ஆகியோருடன் சேர்ந்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டார்.
மகனுக்கு அப்பா போட்ட ஸ்கெட்ச்
அப்போது கருப்பையா பாலாவிடம், "ஆட்டோ ஓட்டியாவது அம்மாவை காப்பாற்றணும்" என்று ஸ்ரீகாந்த் நினைப்பதாக கூறியிருக்கிறார்.. இதைக்கேட்டதும் பாலா, இதனை வைத்தே ஐடியா தீட்டி கருப்பையாவிடம் தந்தார்.
உடனே கருப்பையா ஸ்ரீகாந்திடம் "உனக்கு டிரைவிங் லைசென்ஸ் எடுத்து தந்து, சொந்தமாக ஒரு ஆட்டோவும் வாங்கித் தருகிறேன்" என்று ஆசை வார்த்தைகளைக் கூறி நம்ப வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு, ஆட்டோ வாங்குவது பற்றி பேசலாம் என்று சொல்லி, ஸ்ரீகாந்தை தன்னுடைய பைக் உட்கார வைத்து, தேனி அருகே உள்ள வயல்பட்டி முல்லைப்பெரியாற்றுப் படுகைக்குக் கருப்பையா அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அப்பா பாலாவும், ஸ்ரீகாந்துடன் ஏற்கனவே முன்விரோதத்தில் இருந்த 25 வயது அலெக்ஸ்பாண்டியனும் தயாராக காத்திருந்தனர். அனைவரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
பெரியாற்றில் வீசிய மூட்டை
பிறகு திட்டமிட்டபடி ஸ்ரீகாந்தின் கழுத்தை ஒரு துண்டால் இறுக்கி, மூச்சுத்திணறடித்து கொன்றுள்ளனர்.. உடல் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, கசாப்புக் கடைகளில் பயன்படுத்தப்படும் பெரிய கத்திகளை எடுத்து, ஸ்ரீகாந்தின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டினார்கள். அனைத்தையும் சேர்த்து மூட்டையாக கட்டி, முல்லைப்பெரியாற்றில் வீசிவிட்டு அனைவரும் தப்பி சென்றுவிட்டனர்.
இதனிடையே, மகன் வீடு திரும்பாததால் தாய் ராஜலட்சுமி தேனி போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசாரின் நடவடிக்கையில் திருப்தியில்லை என்பதாலும், கணவர் பாலா மீது சந்தேகம் இருந்ததாலும், ராஜலட்சுமி மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
தேனி ஜோதிடரிடம் விசாரணை
சிபிசிஐடி போலீசார் வேந்தர் பாலா மற்றும் அலெக்ஸ்பாண்டியனை கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோதுதான், இந்த உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தன.
கைது செய்யப்பட்ட 2 பேரையும், கொலை நடந்த இடத்திற்கு நேரில் அழைத்துச் சென்று போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.. மேலும், சடலத்தை மறைக்கப் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கொலை நடந்து 3 வருடங்கள் ஆகிவிட்டதால், அந்த பாறைப் பகுதி மற்றும் காரில் இருந்து எடுக்கப்படும் ரத்தக் கறைகளை, தாய் ராஜலட்சுமியின் டிஎன்ஏ மாதிரியுடன் ஒப்பிட்டு அறிவியல் பூர்வமாக கோர்ட்டில் நிரூபிக்க போலீசார் தீவிரமாக உள்ளனர்.
அதேபோல கொலையைத் தூண்டிய அந்த ஜோதிடரிடமும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ள சிபிசிஐடி, தற்போது தலைமறைவாக இருக்கும் முக்கியக் குற்றவாளி கருப்பையாவைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்து வலைவீசித் தேடி வருகிறது... 3 வருடங்களுக்கு முன்பு, பெத்த மகனையே துண்டு துண்டாக வெட்டிய வழக்கில், முக்கிய குற்றவாளி பிடிபட்டுள்ளது தேனி மக்களை உலுக்கியுள்ளது...!!













Click it and Unblock the Notifications