ஊழலை ஒழிப்போம்னு மைக்கில் பேசினா போதாது.. தவெகவுக்கு கிளாஸ் எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. லஞ்சம், ஊழலை ஒழித்து நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறியிருந்தார். மறுபக்கம் ஊழல் வழக்குகள் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்களை தங்கள் கட்சியில் தவெக இணைத்து வருகிறது. இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. வேலுமணி தொடர்பான முறைகேடு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஊழலை ஒழிப்பதாக மைக் முன்பு பேசுகிறார்கள். பேசினால் மட்டும் போதாது. நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது டெண்டர் உள்ளிட்டவற்றில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அறப்போர் இயக்கம், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து வேலுமணி மற்றும் அவரின் ஆதரவாளர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தினர்.

வேலுமணி ஊழல் வழக்கு
அதிமுக ஆட்சிக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்து, இப்போது தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனாலும் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் ஒப்பந்தம் வழங்கியதில் ரூ. 98.25 கோடி முறைகேடு செய்துள்ளார்.
வேலுமணிக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு கடந்த 2024 ஆம் ஆண்டு அனுமதி பெறப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஆதரவாக பல்வேறு அதிகாரிகளும் துணை புரிந்துள்ளனர்.
வழக்கில் குற்றம் சட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளான கே.எஸ்.கந்தசாமி மற்றும் கே.விஜயகார்த்திகேயன் மீது வழக்குத் தொடர மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மைக் முன்பு பேசினால் போதாது
அப்போது, "ஊழலை ஒழிப்பதாக மைக் முன்பு அனைவரும் பேசுகின்றனர். சட்டம் பற்றி பேசினால் மட்டும் போதாது. அதை நடைமுறை படுத்த வேண்டும். குற்றம் நடந்து 5 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. அடுத்த தேர்தலும் முடிந்துவிட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்தும் விட்டனர். ஊழல் ஒழிப்பு பற்றி மேடைக்கு மேடை மைக்கில் பேசினால் போதாது அதை செயல்படுத்த வேண்டும்" என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
ஊழல் வழக்கில் தமிழக அரசின் நிலைபாடு என்ன என்பதை வருகிற ஜூலை 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த
2025 நவம்பர் முதல், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்வதற்கான அனுமதி பெறாமல் இருப்பதற்கு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதில் தவெக என்ன நிலைப்பாடு எடுக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.














Click it and Unblock the Notifications