தப்பினார் பிரகாஷ் ராஜ்.. தமிழகம் உள்பட 4 மாநில ஓட்டுரிமை வழக்கில் ஜாமீன் வழங்கிய பெங்களூர் கோர்ட்
பெங்களூர்: தமிழ் உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் ஓட்டுரிமை வைத்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த வழக்கில் இன்று பிரகாஷ்ராஜ் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜரானார். சம்மன் தனது கைக்கு கிடைக்கவில்லை என்று கூறிய நிலையில் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை ரத்து செய்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி அதிரடி உத்தரவிட்டது. இதனால் பிரகாஷ் ராஜ் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி உள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜ். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு பெங்களூர் மத்திய தொகுதியில் தோல்விடைந்தார்.
இவர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவை எதிர்த்து நடக்கும் போராட்டங்களில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் கூட பெங்களூரில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' சார்பில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இதற்கிடையே தான் பிரகாஷ் மீது பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2019ம் ஆண்டில் பிரகாஷ் ராஜ்க்கு எதிராக பெங்களூர் அல்சூர்கேட் போலீசில் வழக்கறிஞர் திலீப் குமார் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், பிரகாஷ் ராஜ் கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஓட்டுரிமை வைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த புகார் மீது அல்சூர்கேட் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து வழக்கறிஞர் திலீப் குமார் சார்பில் பெங்களூர் 48 வது கூடுதல் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் ''ஒருவர் ஒரு வாக்குரிமை மட்டுமே வைத்திருக்க வேண்டும். . ஆனால் பிரகாஷ் ராஜ் 4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார். கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளார். இது சட்டவிரோதமானது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பிரகாஷ் ராஜ் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. ஆனால் பிரகாஷ் ராஜ் ஆஜராகவில்லை. இந்நிலையில் தான் நீதிமன்றம் பிரகாஷ் ராஜ்க்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் பிரகாஷ் ராஜ்க்கு கைதாகும் அபாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் தான் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பிரகாஷ் ராஜ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞருடன் ஆஜரானார். பிரகாஷ் ராஜ் தரப்பில், ''சம்மன் எதுவும் கைகளில் வழங்கப்படவில்லை. நீதிமன்றம் சார்பில் சம்மன் வழங்கப்பட்டு இருப்பதை ஊடகங்கள் வழியாக தான் அறிந்தோம்'' என்று கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட, நீதிமன்றம் பிரகாஷ் ராஜ்க்கு எதிராக முன்பு பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை ரத்து செய்தார். அதோடு பிரகாஷ் ராஜ்க்கு இந்த வழக்கில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ரூ.4 ஆயிரம் பிணைத்தொகையை செலுத்திய பிரகாஷ்ராஜ் ஜாமீனில் வெளியே வந்தார். இதன்மூலம் அவர் கைது நடவடிக்கையில் இருந்து தப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications