"ஓடு.. ஓடு.. ஓடு.." விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி.. கரூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி தாக்கு
கரூர்: கரூரில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் விஜய், "ஊரை அடித்து உலையில் போட்ட கரூர் கம்பெனிக்காரர் ஓடிவிட்டார். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை" என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், "ஓடு ஓடு ஓடு... வரான் பாரு வேட்டைக்காரன்" என்ற பாடலைப் பாடியும் கிண்டலடித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து செந்தில் பாலாஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?.

மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?.
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஓடு. ஓடு.. ஓடு... என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications