ஹேப்பி ஹனிமூன் ரயிலில்.. மும்பை டூ ஜல்னா செவன் ஸ்டார் முதலிரவு அறை: நடுவழியில் போலீஸ் அதிரடி வேட்டை
சென்னை: மஹாராஷ்டிராவில் நந்திகிராம் விரைவு ரயிலின் முதல் வகுப்பு ஏசி கூபே பெட்டியை, புதுமண தம்பதிக்காக முதலிரவு அறை போல் மலர்கள் மற்றும் பலூன்களால் அலங்கரித்த வீடியோ வைரலானது.. இதை விதிமீறல் என ரயில்வே நிர்வாகம் கருதியதுடன், அந்த பெட்டியின் டிக்கெட் பரிசோதகரை சஸ்பெண்ட் செய்தது. அலங்காரம் செய்த நபர் மீதும் ரயில்வே பாதுகாப்புப் படை வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறது. இதுகுறித்து மத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
Cheyyaru Balu சேனலில் பேசியிருக்கும் செய்யாறு பாலு, "இந்தியாவில் ஏழை எளிய மக்கள் நீண்ட தூரப் பயணத்திற்காக அதிகம் பயன்படுத்துவது ரயில்தான். சாமானியர்களின் அன்ரிசர்வ்டு பெட்டிகளை இந்திய ரயில்வே இப்போது குறைத்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில்,நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் AC ஃபர்ஸ்ட் கிளாஸ் கூபே பெட்டி முழுவதையும் முன்பதிவு செய்து, ஒரு செவன் ஸ்டார் ஹோட்டல் போல முதலிரவிற்காக அலங்காரம் செய்துள்ளனர். உங்களுக்கு அவ்வளவு வசதியும் பணமும் இருந்தால் ஒரு தனி விமானத்தையே முழுமையாகப் புக் செய்து உங்களது கல்யாணத்தை எங்கு வேண்டுமானாலும் கொண்டாடிக்கொள்ளுங்கள்.
புதுமண தம்பதி முதலிரவு
ஆனால், லட்சக்கணக்கான சாமானிய மக்கள் பயணிக்கும் ஒரு பொது ரயிலில் "ஹேப்பி ஹனிமூன்" போன்ற ஸ்டிக்கர்களையும், பூங்கொத்துகளையும் வைத்து இப்படி அலங்காரம் செய்து கொண்டாடுவது எப்படிச் சாத்தியம்? இதற்கு ரயில்வே நிர்வாகம் எப்படி அனுமதி அளித்தது?
இந்த நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பையிலிருந்து புறப்பட்டு மகாராஷ்டிரா, தெலுங்கானா வழியாகச் செல்லும் ஒரு பிரபலமான வழித்தட வண்டியாகும். ஔரங்காபாத் பகுதியில் இருந்து ஒரு திருமண ஜோடி காரில் இந்த ரயிலைப் பிடிப்பதற்காகத் துரத்திக்கொண்டு வந்துள்ளனர். அவர்கள் வருவதற்கு முன்பே, ஜல்னா ரயில் நிலையத்தில் ஒரு தனியார் அலங்கார நிறுவனம் ரயிலின் கூபே பெட்டிக்குள் புகுந்து சென்ட்களை அடித்து, மலர்களால் அந்த ரூமை முழுமையாக அலங்கரித்துள்ளது.
ஹேப்பி ஹனிமூன்
இதைப் பார்த்த சக பயணிகள் ஏதோ விழா நடப்பது போலக் கடந்து சென்றுள்ளனர். கார் மூலம் சரியான நேரத்திற்கு வந்த புதுமண ஜோடி, ஜல்னா ரயில் நிலையத்தில் ஏறி கதவைச் சாத்திக்கொண்டு தங்களது முதலிரவைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது.
முன்பெல்லாம் அரசியல் தலைவர்களும் பிரபல நட்சத்திரங்களும் இந்த கூபே பெட்டிகளில் ரகசியமாகப் பயணம் செய்த வரலாறுகள் உண்டு. தனி ரூம் போன்ற இந்த வசதியைப் பயன்படுத்திப் பல்வேறு குற்றச்சாட்டுகளும் கிசுகிசுக்களும் அப்போது எழுந்துள்ளன.
ஆனால், இந்த திருமண ஜோடி உள்ளே சென்று கதவைச் சாத்தியதும்தான், அங்கு வந்த டீ, காபி விற்பவர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் மூலமாக இந்த ஆடம்பர ஏற்பாடு குறித்த செய்தி ஸ்லீப்பர் கிளாஸ் வரை இருக்கும் சக பயணிகளுக்குத் தெரியவந்தது.
ரயிலில் முதலிரவு
இன்று ஒரு நடுத்தரக் குடும்பத்தினர் ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்பதே பெரும் சவாலாக உள்ளது. காட்பாடி, அரக்கோணம் போன்ற ஸ்டேஷன்களில் சென்னைக்கு வேலைக்குச் செல்லும் தினசரி பயணிகள், எந்தவிதமான தயக்கமும் இல்லாமல், ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளுக்குள் அத்துமீறி நுழைந்து உட்கார்ந்து கொள்கின்றார்கள்.
நாம் தக்கல் மூலமாகவோ அல்லது பல மாதங்களுக்கு முன்போ சிரமப்பட்டு எடுத்த சீட்டில், நாம் பாத்ரூம் போயிட்டு வருவதற்குள் அவர்கள் ஏறி படுத்துக் கொள்கிறார்கள். இதே நிலைதான் கேரளா போன்ற பிற மாநில ரயில்களிலும் நடக்கிறது. நடுத்தர மக்களுக்கே இந்த நிலை என்றால், அன்ரிசர்வ்டு பெட்டிகளில் பயணிக்கும் ஏழைகளின் நிலைமை பெரும்பாடாகும்.
கோவில்களில் பணம் படைத்தவர்கள் கட்டண தரிசனத்தில் விரைவாக சாமியைப் பார்த்துவிடுவதையும், ஏழைகள் தர்ம தரிசன வரிசையில் நாள் கணக்கில் காத்துக் கிடப்பதையும் போன்ற ஒரு பாகுபாடுதான் இங்கும் நடக்கிறது.
அன்ரிசர்வ்டு டிக்கெட்
வடமாநிலங்களுக்கு வேலைக்கு செல்லும் ஏழைகளிடம் அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுக்கக் கூடப் பணம் இருப்பதில்லை. அவர்கள் ரயிலின் பாத்ரூம் பக்கத்திலும், கதவோரத்திலும் ஒளிந்து கொண்டும், ரயில்வே போலீசாரிடம் சிக்கி முகம் தெரியாத நிலையங்களில் இறக்கிவிடப்பட்டும் அவதிப்படுகிறார்கள்.
மக்கள் இப்படியெல்லாம் சிரமப்படும் ஒரு பொதுப் போக்குவரத்திற்குள், பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக லஞ்சம் கொடுத்து இப்படி ஒரு சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது பணத் திமிரின் உச்சமாகும். ஆபத்தான முறையில் போட்டோஷூட் நடத்துவது உங்களது தனிப்பட்ட விருப்பம். ஆனால், பொதுமக்கள் பயன்படுத்தும் ஒரு பொது இடத்தில் தங்களுக்கு என்று பிரத்யேக சொகுசை ஏற்படுத்தி முதலிரவு கொண்டாடிய இந்த ஜோடியின் மனநிலை முற்றிலும் தவறானது.
சஸ்பெண்ட் - அபராதம்
பயணிகள் உடனடியாக இந்த அவலத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, ரயில்வே தலைமை அதிகாரி மற்றும் கோட்ட பொது மேலாளருக்குப் புகார்களை அனுப்பியதால்தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. கடைசியில், லஞ்சம் வாங்கிய அந்த முதன்மை டிக்கெட் பரிசோதகர் (TTE) இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அந்த ஜோடிக்கும் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாமானிய மக்கள் உடனடியாகக் குரல் கொடுத்ததால்தான் இந்த நடவடிக்கை சாத்தியமாகியுள்ளது. இது போன்ற தவறுகள் பொது இடங்களில் இனிமேலும் தொடரக்கூடாது" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.














Click it and Unblock the Notifications