ரயில் பெட்டியில் முதலிரவு.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ.. ரயில்வே அதிரடி நடவடிக்கை!
ஹைதராபாத்: ஓடும் ரயிலில் புதுமண தம்பதிக்காக முதல் வகுப்பு ஏசி பெட்டி கிட்டத்தட்ட முதலிரவு செட் அப்பில் பலூன்கள், மலர்கள் மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டது சர்ச்சையானது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், தெற்கு மத்திய ரயில்வே இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக முக்கிய விளக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளது.
இந்தியாவில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்தில் ஒன்றாக ரயில்வே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல கோடி மக்கள் நாடு முழுக்க ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள். ரயில்வே பாதுகாப்பு மற்றும் சேவையை உறுதி செய்ய ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

முதலிரவு செட்அப்!
இதற்கிடையே ரயில் ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. 11002 நந்திகிராம் எக்ஸ்பிரஸ் என்ற ரயிலில் பயணித்த புதுமண தம்பதி ஒருவர், முதல் வகுப்பு ஏசி கூபேவை முதலிரவு போல அலங்கரிக்க ஏற்பாடு செய்திருந்தது. தனியார் நிறுவனம் மூலம் அவர்கள் இதைச் செய்துள்ளனர். கடந்த ஜூலை 6-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாது.
ரயில்வே நடவடிக்கை
இந்தியாவில் ரயில்களில் இதுபோல அலங்கரிக்க முடியுமா.. அவர்கள் விதிமுறைகளை மீறியுள்ளனர்.. அதிகாரிகளும் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று நெட்டிசன்கள் பொங்கி தள்ளினர். கடந்த இரு நாட்களாகவே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக தெற்கு மத்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜல்னா ரயில் நிலையத்தில் தனியார் நிறுவன ஊழியர் அனுமதியின்றி ரயிலுக்குள் நுழைந்து பெட்டியை அலங்கரித்துள்ளார். இது மிகவும் கடுமையான பாதுகாப்பு விதிமுறை மீறலாக கருதப்படுகிறது.. இந்த சம்பவம் தொடர்பாக பணியில் இருந்த ரயில்வே ஊழியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறப்பட்டுள்ளது.
Indians are celebrating honeymoon in the First AC coaches on trains.
— Simpu Singh (@Simpu_SinghIND) July 8, 2026
Is this actually allowed or not???
I think this is a wrong culture. If it continues then people will make trains a moving OYO in the upcoming time. pic.twitter.com/sxthvUKeeb
கடும் நடவடிக்கை
சம்பவம் நடந்தபோது தலைமை டிக்கெட் பரிசோதகராக கிரீஷ் குமார் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் மீதே சஸ்பெண்ட் நடவடிக்கை பாய்ந்துள்ளதாக தெரிகிறது. ரயில்வே சட்டத்தின் கீழ், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது, அனுமதியின்றி ரயிலுக்குள் நுழைவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அந்த தனியார் நிறுவனத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வீடியோவில், முதல் வகுப்பு ஏசி கூபே முழுவதும் முதலிரவு செட் அப்பில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கூபே பெட்டியின் கதவுகள் இதய வடிவ அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலே முழுவதும் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கீழே தரையில் ஆயிரக்கணக்கான ரோஜா இதழ்கள் போடப்பட்டு இருந்தது.
மேலும், அங்கு ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு மலர்களால் செய்யப்பட்ட பூங்கொத்துகள் மற்றும் மாலைகளும் வைக்கப்பட்டிருந்தன. படுக்கையில் மலர்களை வைத்து இதய வடிவ மலர் அலங்காரம் செய்திருந்தனர். இன்னொரு படுக்கையில் "ஐ லவ் யூ" என்ற வாசகமும் உருவாக்கப்பட்டிருந்தது. சில இடங்களில் எல்இடி விளக்குகளும் பொருத்தப்பட்டிருந்தன.
என்ன நடந்தது?
மகாராஷ்டிராவை சேர்ந்த ரஹத் ரூம் டெக்கரேஷன் என்ற நிறுவனம் தான் இந்த வேலையைச் செய்ததாக கூறப்படுகிறது. ஜல்னாவை சேர்ந்த புதுமண தம்பதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அவர்கள் அவுரங்காபாத்தில் இருந்து காரில் வந்து ஜல்னாவில் ரயிலில் ஏறியதாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ பேசுபொருள் ஆன நிலையில், இப்போது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.














Click it and Unblock the Notifications