தமிழ்நாடு உள்ளே வந்த ராட்சச ஹைவே.. இனி சல்லுன்னு பறக்கலாம்.. வாகன ஓட்டிகளுக்கு குஷி.. எங்கே?
தருமபுரி: தருமபுரி - இராயக்கோட்டை - நெரலூர் (NH-844) இடையேயான புதிய 4 வழி தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியில் பயணம் எளிதாகி உள்ளது.
தமிழகத்தின் மேற்கு மற்றும் தர்மபுரி மாவட்ட மக்களுக்கும், பெங்களூர் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் ஒரு மிகப்பெரிய போக்குவரத்து நிம்மதியாக இந்த சாலை அமைந்துள்ளது. தருமபுரி - இராயக்கோட்டை - நெரலூர் (NH-844) இடையேயான புதிய 4 வழி தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் தற்போது முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

மத்திய அரசின் 'பாரத்மாலா பரியோஜனா' திட்டத்தின் கீழ் இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் ரூ.2,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்த புதிய நெடுஞ்சாலை, பெங்களூர் மற்றும் தருமபுரி இடையேயான பயண அனுபவத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.
பல வருட ஏக்கம் : இந்த தேசிய நெடுஞ்சாலை
பல ஆண்டுகளாக தென் தமிழகம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து பெங்களூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் வழியாகச் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையை மட்டுமே சார்ந்து இருந்தன.
இதனால், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி நகர்ப்புறப் பகுதிகளிலும், ஒரகாடம் மற்றும் அத்திப்பள்ளி சுங்கச்சாவடிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது.
அதுமட்டுமின்றி, விபத்துகளுக்குப் பெயர்போன தொப்பூர் கணவாய் பகுதியிலும் வாகன நெரிசல் அதிகமாகவே இருந்தது. இதனால் அங்கே கடந்த 5 வருடங்களில் மட்டும் 1000க்கும் அதிகமான விபத்துகள் ஏற்பட்டது. இந்த புதிய NH-844 சாலை, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் நகரங்களைத் தொடாமல் முற்றிலும் புறவழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளதால், இந்த போக்குவரத்து நெரிசல்கள் அனைத்தும் தவிர்க்கப்பட்டுள்ளன.
குறைந்த தூரம், அதிவேகப் பயணம்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரவுகளின்படி, இந்த புதிய 4 வழிச் சாலை தருமபுரியில் தொடங்கி பாலக்கோடு, மாரண்டஹள்ளி, இராயக்கோட்டை, கெலமங்கலம் மற்றும் அத்திபெல்லே அருகே உள்ள நெரலூர் வரை சுமார் 90 கிலோமீட்டர் தூரத்திற்கு நீள்கிறது.
இந்த புதிய வழித்தடத்தின் மூலம் தருமபுரியில் இருந்து பெங்களூர் எல்லைக்கான மொத்த பயண தூரம் சுமார் 25 கிலோமீட்டர் வரை குறைந்துள்ளது.
மிக முக்கியமாக, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் நகரின் சிக்னல்கள், நெரிசலான சாலைகள் மற்றும் உள்ளூர் வாகனப் போக்குவரத்து ஆகியவற்றைக் கடக்க வேண்டிய அவசியம் இல்லாததால் பயணம் எளிதாகி உள்ளது.
இங்கே ஒட்டுமொத்த பயண நேரம் 45 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் வரை மிச்சமாகிறது. மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு இந்த சாலைப் பணிகள் மிக நேர்த்தியாக முடிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் விவசாய வாகனங்கள் மற்றும் கிராமப்புறப் போக்குவரத்து பிரதான நெடுஞ்சாலையில் இடையூறு ஏற்படுத்தாத வகையில், சாலையின் இருபுறமும் Service Lanes அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய நெடுஞ்சாலையில் அதிவேகப் பயணத்தை உறுதி செய்யவும், அதே நேரத்தில் விபத்துகளைத் தவிர்க்கவும் பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
நெரலூர் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை குறைத்துள்ளது. முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல உதவும் கீழ்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நெடுஞ்சாலை ஓசூர் அருகே உள்ள சானமாவூர் காப்புக்காடு மற்றும் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகள் வழியாகக் கடந்து செல்வதால், மனித-விலங்கு மோதல்களைத் தடுக்கும் வகையில் நவீன வனவிலங்கு கீழ்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் இங்கே போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications