சிங்கப்பூர் மாஸ்டர் பிரைன் லட்சுமண பெருமாளை "தட்டித் தூக்க" சென்னை போலீஸ் அதிரடி! சிக்க வைத்த போன்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் லட்சுமண பெருமாளுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நாலாபுறமும் போலீசார் செக் வைத்துள்ளனர்.. இதனால் அவர் வசமாக சிக்கி கொண்டுவிட்டதாகவே தெரிகிறது.. தமிழக அரசியல் வட்டாரத்தில் தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசப்பட்ட விவகாரம், இப்போது ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ டாக்டர் என்.இளையராஜாவை, சென்னையில் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு என்பவர் போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

"சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், நாங்கள் சொல்வது போல நீங்கள் கேட்டால் உங்களுக்கு 35 கோடி ரூபாய் தரப்படும்" என்று அப்பட்டமாக பேரம் பேசினாராம்.. இதற்கு இளையராஜா மறுப்பு சொல்லவும், அவருக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த எம்எல்ஏ இளையராஜா, சென்னை கமிஷனர் ஆபீசில் புகார் ஒன்றை தந்தார். அந்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி இதுவரை 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
செந்தில் பாலாஜி
போலீசாரின் விசாரணையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் தான் இந்த சதித்திட்டம் நடந்துள்ளதாக கைது செய்யப்பட்டவர்கள் பகீர் வாக்குமூலத்தை தந்துள்ளனர்.. இதனால் 2 பேரையுமே தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஜூலை 6ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியும் 2 பேருமே ஆஜராகவில்லை. அதற்குள் இந்த வழக்கில் அவர்கள் இருவருக்கும் நீதிமன்றம் கண்டிஷன் பெயில் வழங்கியது.
இதனிடையே இந்த குதிரை பேர பிளான் சாதாரணமானது இல்லை, இதன் பின்னணியில் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனமே இருக்கிறது என்பதும், இதற்காக சுமார் 180 கோடி ரூபாய் வரை பணம் ஒதுக்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி?
சென்னை கிண்டி, ஈசிஆர் பகுதிகளில் உள்ள சொகுசு நட்சத்திர விடுதிகளில் தங்கித்தான் இந்த ஆட்சியை கவிழ்க்கும் சதித்திட்டத்தை தீட்டியுள்ளதும் தெரியவந்தது.. இதில் கைதான நரேஷ் என்பவரின் வீட்டில் சோதனை நடத்திய தனிப்படை போலீசார், முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஜெயிலுள்ள முக்கிய குற்றவாளிகள் 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள், போன் கால்கள் என அனைத்தையும் போலீசார் செக் செய்த போதுதான், ஒரு முக்கிய துப்பு கிடைத்துள்ளது. கைதானவர்களில் ஒருவர், சிங்கப்பூரில் உள்ள, ஒரு நபரிடம் தொடர்ந்து போனில் பேசி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்... உடனே அந்த நபர் யார் ? எதற்காக போனில் பேசினார்கள்? என்று அடுத்தவிசாரணையை போலீசார் மேற்கொண்டனர். அப்போதுதான் அந்த "சிங்கப்பூர் லிங்க்" பின்னால் இருப்பவர் பெயர், லட்சுமண பெருமாள் என்பது போலீசுக்கு வந்தது.
யார் இந்த சிங்கப்பூர் லட்சுமண பெருமாள்?
இந்த ஒட்டுமொத்த குதிரை பேர சதித்திட்டத்திற்கும் மாஸ்டர் பிரைன் போட்டு, முக்கிய மூளையாக செயல்பட்டதே இந்த லட்சுமண பெருமாள்தான் என்று போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. சென்னையில் உள்ள சொகுசு ஹோட்டலில் ரகசிய கூட்டங்களை நடத்தி, தவெக ஆட்சியை கவிழ்க்க ஸ்கெட்ச் போட்டு தந்ததும் இவரேதானாம்..
லட்சுமண பெருமாளுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
விஷயம் சீரியஸாகி போலீசார் வழக்கை கையில் எடுத்ததும், உஷாரான லட்சுமண பெருமாள் உடனடியாக சிங்கப்பூருக்கு தப்பியோடிவிட்டார். அதுமட்டுமில்லாமல், சிங்கப்பூரில் இருந்துகொண்டே டெக்னாலஜியை பயன்படுத்தி, சதித்திட்டம் தீட்டப்பட்ட சென்னை ஹோட்டலின் சிசிடிவி கேமரா பதிவுகளை அடித்து நொறுக்கி ஆதாரங்களை அழித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய செல்போன் ஆதாரங்களையும், சிங்கப்பூரிலிருந்தே டிஜிட்டல் முறையில் அழித்து, போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்துள்ளார்.
தொடர்ந்து ஆதாரங்களை அழித்து வரும் லட்சுமண பெருமாளுக்கு, செக் வைக்க சென்னை காவல்துறை இப்போது அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளது. லட்சுமண பெருமாள் இனி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கவும், இந்தியாவிற்குள் நுழைந்தால் உடனடியாக தூக்கவும் சென்னை காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
போன் டிரேஸ் - நாலாபக்கமும் செக்
நாட்டின் அனைத்து சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றாலும், விமான நிலைய அதிகாரிகள் அவரை ஸ்பாட்டிலேயே அதிரடியாக கைது செய்வார்கள்.
அதே நேரத்தில், லட்சுமண பெருமாளின் செல்போன் நம்பரையும் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக டிரேஸ் செய்து வருகின்றனர். அவர் எங்கே இருக்கிறார் என்பதை துல்லியமாக கண்டுபிடித்து, சிங்கப்பூரிலிருந்து அவரை தூக்க தனிப்படை போலீசார் அடுத்தகட்ட மூவ்களை எடுத்து வருகின்றனர். கைதான 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது, இந்த சிங்கப்பூர் லட்சுமண பெருமாள் பற்றிய மேலும் பல திடுக்கிடும் ரகசியங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...!!!














Click it and Unblock the Notifications