அடிவாங்கும் தங்கம்.. கன் மாதிரி நிற்கும் வெள்ளி! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்கள் அட்வைஸ்!
நியூயார்க்: அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை லேசான சரிவை சந்தித்துள்ளது. பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கம், போர் காலங்களில் பொதுவாக விலை உயர்வது தான் வழக்கம். ஆனால் இந்த முறை அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்ததும், போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததும் தங்கத்தின் விலை மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலை பெரிய அளவில் சரியாமல் இருப்பது முதலீட்டாளர்களை கவனிக்க வைத்துள்ளது.
வியாழக்கிழமையான இன்று ஆசிய தங்க சந்தையில் வர்த்தகம் தொடங்கியபோது, அவுன்ஸ் ஒன்றுக்கான ஸ்பாட் தங்கத்தின் விலை சுமார் 0.3 சதவீதம் குறைந்து 4,066 டாலராக வர்த்தகமானது. இதற்கு முந்தைய வர்த்தக நாளில் ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு குறைந்த விலையையும் தங்கம் தொட்டிருந்தது.

ஆகஸ்ட் மாத டெலிவரிக்கான அமெரிக்க தங்க ஃபியூச்சர்ஸ் விலையும் 0.1 சதவீதம் சரிந்து 4,077 டாலராக இருந்தது. அதேநேரத்தில், காமெக்ஸ் சந்தையில் தங்க ஃபியூச்சர்ஸ் விலை பெரிய மாற்றமின்றி 4,083 டாலர் அளவில் காணப்பட்டது.
தங்கம் விலை
ஆனாலும், வெள்ளி சந்தையில் எந்த வித பெரிய மாற்றமும் ஏற்படவில்லை. காமெக்ஸ் வெள்ளி ஃபியூச்சர்ஸ் விலை 0.1 சதவீதம் உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 58.60 டாலராக வர்த்தகமானது. கடந்த சில நாட்களில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்களுக்குப் பிறகு வெள்ளி தற்போது நிலையான போக்கைக் காட்டி வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்கத்தின் இந்த சரிவுக்குப் பின்னால் அமெரிக்கா - ஈரான் இடையேயான புதிய ராணுவ பதற்றமே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரு நாடுகளுக்கிடையேயான இடைக்கால ஒப்பந்தம் இனி நடைமுறையில் இல்லை என்று அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் ஈரான் மீது புதிய தாக்குதல்களை மேற்கொண்டது. இந்த சம்பவம் சர்வதேச சந்தையில் பதற்றத்தை அதிகரித்ததுடன், கச்சா எண்ணெய் விலையையும் உயர்த்தியது. எண்ணெய் விலை உயர்வது உலகளவில் பணவீக்கத்தை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ்
இதனால் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்ந்த நிலையிலேயே வைத்திருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் வலுப்பெற்றுள்ளது. வட்டி வருமானம் தராத முதலீடாக இருக்கும் தங்கத்திற்கு இது சாதகமான சூழல் அல்ல. அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் எச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது உலக முதலீட்டாளர்களின் கவனம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் ஜூன் மாத கொள்கைக் கூட்ட குறிப்புகள் மீது திரும்பியுள்ளது.
வெள்ளி விலை
அதோடு, வாராந்திர வேலைவாய்ப்பு இழப்பு தொடர்பான தரவுகளும் விரைவில் வெளியாக உள்ளன. இந்த இரண்டு அறிவிப்புகளும் அமெரிக்க வட்டி விகிதத்தின் அடுத்தகட்ட திசையை தீர்மானிக்க முக்கியமானதாக இருப்பதால், தங்கம் மற்றும் வெள்ளி சந்தைகளில் முதலீட்டாளர்கள் காத்திருக்கும் மனநிலையிலேயே உள்ளனர்.
தங்கம் மற்றும் வெள்ளி
ரிட்டிசித்தி புல்லியன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரித்விராஜ் கோத்தாரி கூறுகையில், அமெரிக்காவின் புதிய ராணுவ நடவடிக்கைகளால் டாலரின் மதிப்பும், அமெரிக்க அரசுப் பத்திரங்களின் வருமானமும் உயர்ந்ததால் தங்கம் மற்றும் வெள்ளி மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் கடந்த ஒரு வாரத்தில் இரு உலோகங்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருந்ததால், தற்போது காணப்படும் சரிவு என்பது குறுகிய கால லாபப் பதிவு காரணமாக ஏற்பட்ட இயல்பான மாற்றமாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளி இறக்குமதி
தங்கம் சரிவை சந்தித்தாலும் வெள்ளி சந்தை ஒப்பீட்டளவில் வலுவாக இருப்பதற்கும் முக்கிய காரணங்கள் உள்ளன. குறிப்பாக இந்தியாவில் வெள்ளி இறக்குமதியில் இருந்த கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக சப்ளை குறைந்துள்ளது. இதனால் உள்நாட்டு சந்தையில் வெள்ளிக்கு கூடுதல் மதிப்பு கிடைத்து வருகிறது. மேலும் தொழில்துறை பயன்பாடு, சோலார் உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் துறை மற்றும் முதலீட்டு தேவை ஆகியவை வெள்ளி விலைக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகின்றன என்கின்றனர்.













Click it and Unblock the Notifications