கையில தங்கம் இருக்கு.. கவலை எதற்கு! தங்க நகைக் கடனில் புதிய டிரெண்ட்! நம்ம ஆளுக மனநிலையே மாறிடுச்சு!
சென்னை: பணக்கார குடும்பங்களை தவிர்த்து நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் மருத்துவ செலவு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக மட்டுமே தங்கத்தை அடகு வைத்து வந்த நிலையில் தற்போது பலருக்கும் தங்கம் ஒரு முக்கியமான நிதி ஆதாரமாக மாறி வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையில் தங்கத்தை அடகு வைத்து கடன் பெறும் நடைமுறை இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது வெறும் தற்காலிக வளர்ச்சி அல்ல எனவும், இந்தியர்களின் நிதி அணுகுமுறையே முற்றிலும் மாறி வருவதாக சொல்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்
இந்திய ரிசர்வ் வங்கியான ஆர்பிஐ வெளியிட்டுள்ள தரவுகளில் படி 2026 மே மாத நிலவரப்படி வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என சொல்லப்படும் என்பிஎப்சி வழங்கிய தங்க நகை அடமான கடன்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 70 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளன.

இது போன்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் மொத்த கடனின் மிக வேகமாக தங்க நகை கடன் வளர்ந்து வருகிறது. 2024 மே மாதத்தில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் மொத்த கடன்களை தங்க அடமானக் கடல்களின் பங்கு சுமார் 3% தற்போது. அது 6 சதவீதத்தை நெருங்கி இருக்கிறது.
தங்க நகை கடன்
மேலும் மொத்த தங்க கடன் அளவு 3.3 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மட்டுமல்லாது வங்கிகளிலும் இதே நிலைதான் உள்ளது. வங்கிகள் வழங்கிய தங்க கடன்கள் ஒரு ஆண்டில் 150 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2026 மே மாதத்தில் வங்கிகள் வழங்கிய மொத்த தங்க கடன் 5.1 லட்சம் கோடியாக பதிவாகி இருக்கிறது. முன்பெல்லாம் அவசர தேவைக்காக மட்டுமே தங்கத்தை அடகு வைக்கும் மனநிலை இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணம் முற்றிலும் மாறி வருகிறது என்று சொல்கின்றனர் நிதி நிபுணர்கள்.
ஆர்பிஐ
தற்போது தங்க கடன் பெறுபவர்களில் நல்ல வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கிறது. அதாவது நல்ல சம்பளம் வாங்கும் வசதி வாய்ப்பு கொண்டவர்களே தங்க நகை கடன் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்பெல்லாம் 42 சதவீதம் பேர் தான் தங்க நகை கடன் பெற்ற நிலையில், தற்போது 52 சதவீதம் அளவுக்கு இது உயர்ந்திருக்கிறது. பணம் இல்லாததால் தங்கத்தை அடகு வைக்கிறேன் என்ற மனநிலையில் இருந்து என்னுடைய தங்கத்தை அடகு வைத்தால் குறைந்த வட்டியில் பணம் கிடைக்கும் என்ற நிதி திட்டமிடல் இந்த புதிய அணுகுமுறைக்கு காரணம் என்றும் சொல்கின்றனர்.
பழைய கடன்
திருமணம் மருத்துவ தேவைகளுக்காக மட்டுமின்றி தொழிலை விரிவுபடுத்துவது, வெளிநாட்டு பயணம், குழந்தைகளின் உயர்கல்வி, தொழில் முதலீடு, பணப்புழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்கத்தை அடகு வைத்து கடன் பெறும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி நிலைத்தன்மை அறிக்கையிலும் இதே கருத்துதான் முன்வைக்கப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்திருப்பதால் ஏற்கனவே கடன் பெற்றோர்கள் கூட அதிக கடன் தொகை பெற்று பழைய கடன்களை புதுப்பித்து வருகின்றனர்.
தனி நபர் கடன்
பொதுவாக தனி நபர் கடன்களை விட தங்க நகை கடன் பாதுகாப்பாக இருப்பதால் வங்கிகளும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் தங்க நகைக்கடன் வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. அதே நேரத்தில், கடந்த சில மாதங்களில் தங்க விலை உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது ஓரளவு சரிவு ஏற்பட்டுள்ளது. இதுதான் ஆரிபிஐயின் கவலையாக உள்ளது.
ஆர்பிஐ எச்சரிக்கை
தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்தால், அடமானமாக வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது. அப்படியான சூழலில் வங்கிகளின் பாதுகாப்பு கேள்விக்குரியாகலாம். அதேபோல், கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஆர்பிஐ எச்சரித்துள்ளது. எனவே தங்க விலை ஏற்ற இறக்கங்களை நிதி நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications