உலகிலேயே மிகக் கொடிய விஷப் பாம்புகள் எவை? ஒருமுறை கடித்தால் 100 பேருக்கு எமன்
சென்னை: பாம்புகள் என்றாலே பயப்படுபவர்கள் பலர் உண்டு. ஆனால், ஒரு சொட்டு விஷத்திலேயே நூறு மனிதர்களைச் சாய்க்கும் வல்லமை கொண்ட பாம்புகள் உலகில் உள்ளன. அறிவியல் ரீதியாகப் பார்த்தால், உலகின் மிகக் கொடிய நச்சு கொண்ட முதல் 5 பாம்புகள் இவைதான்:
இன்லேண்ட் தைப்பான்
உலகிலேயே மிக அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு 'இன்லேண்ட் தைப்பான்' ஆகும். ஆஸ்திரேலியாவின் மத்திய பாலைவனப் பகுதிகளில் வாழும் இந்தப் பாம்பு, ஒருமுறை கடித்தால் வெளியிடும் விஷமானது 100 மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு வீரியம் மிக்கது. இதன் விஷம் நரம்பு மண்டலத்தை உடனே செயலிழக்கச் செய்துவிடும். இருப்பினும், இது மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாழ்வதால் இதன் கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகக் குறைவு.

பெல்ச்சர் கடல் பாம்பு
நிலத்தில் வாழும் பாம்புகளை விட பல மடங்கு விஷம் கொண்டது பெல்ச்சர் கடல் பாம்பு தான். கடலில் வாழும் இந்தப் பாம்பின் ஒரு சில மில்லி கிராம் விஷமே ஆயிரம் பேரை கொன்றுவிடும் ஆனால், இது பொதுவாக அமைதியானது மற்றும் மீனவர்களின் வலையில் சிக்கினால் ஒழிய மனிதர்களைத் தாக்காது,
ஈஸ்டர்ன் ப்ரவுன் ஸ்னேக்
ஆஸ்திரேலியாவின் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் காணப்படும் இந்தப் பாம்புதான் அதிக மரணங்களை ஏற்படுத்துகிறது. இதன் விஷம் இரத்தத்தை உறைய வைத்து, சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்யும். இது மிகவும் ஆக்ரோஷமானது; எதிரிகளை விரட்டிச் சென்று தாக்கும் குணம் கொண்டது.

ப்ளூ கிரெய்ட்
தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் இந்த 'ப்ளூ கிரெய்ட்' எனப்படும் கட்டுவிரியன் வகை, இரவு நேரத்தில்தான் வேட்டையாடும். இதன் கொடுமை என்னவென்றால், இது கடித்தால் வலியே தெரியாது. தூக்கத்திலேயே மனிதனின் சுவாசத்தை நிறுத்தி மரணத்தை வரவழைக்கும் கொடூர நச்சு இது.
பிளாக் மாம்பா
ஆப்பிரிக்காவில் காணப்படும் பிளாக் மாம்பா, உலகின் மிக வேகமான பாம்பு (மணிக்கு 20 கி.மீ வேகம்). இதன் விஷம் 'நியூரோடாக்ஸின்' வகையைச் சேர்ந்தது. கடித்த 20 நிமிடங்களில் முறையான சிகிச்சை கிடைக்காவிட்டால், இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து மரணம் நிச்சயம் ஏற்படும்.
இந்தியாவின் மிக அபாயகரமான விஷப் பாம்புகள் பற்றியும் பார்ப்போம். இந்தியாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் இருந்தாலும், மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவது "பிக் ஃபோர்" என்று அழைக்கப்படும் நான்கு முக்கியப் பாம்புகள்தான்.

கட்டுவிரியன்
இந்தியாவின் நிலப்பரப்பில் வாழும் பாம்புகளில் மிகவும் வீரியமான விஷம் கொண்டது கட்டுவிரியன் தான். இது நள்ளிரவில் மட்டுமே வேட்டையாடும். இதன் விஷம் நரம்பு மண்டலத்தை நேரடியாகத் தாக்கும். இதன் கடி வலியே தெரியாது என்பதால், தூக்கத்தில் இருப்பவர்கள் கடிக்கப்பட்டதை உணராமலேயே உயிரிழக்கும் அபாயம் அதிகம்.
கண்ணாடி விரியன்
இந்தியாவில் அதிகப்படியான மனித உயிரிழப்புகளுக்குக் காரணமான பாம்பு இதுதான். இது மிகவும் ஆக்ரோஷமானது. ஆபத்தை உணர்ந்தால் குக்கர் விசில் சத்தம் போல பலத்த சத்தத்தை எழுப்பும். இதன் விஷம் இரத்தத்தை உறைய விடாமல் செய்து, உடல் உறுப்புகளைச் செயலிழக்க வைக்கும் .
ராஜநாகம்
உலகின் மிக நீளமான விஷப் பாம்பு இது. இதன் விஷத்தின் வீரியத்தை விட, இது ஒருமுறை கடித்தால் உடலில் செலுத்தும் விஷத்தின் அளவு மிக அதிகம். ஒரு வளர்ந்த யானையையே சில மணிநேரங்களில் கொல்லும் அளவுக்கு விஷத்தைச் செலுத்தும் வல்லமை கொண்டது. இவை பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் வாழும்.

நாகப்பாம்பு
இந்தியாவில் தெய்வமாக மக்கள்வழிபாடும் நாகப் பாம்பு மிகவும் அபாயகரமான நச்சு கொண்டது. தலையை விரித்து படம் எடுக்கும் குணம் கொண்டது. இதன் விஷம் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதித்து முடக்கிவிடும்.இந்த பாம்பு கடித்து பலர் இறக்கிறார்கள்.
சுருட்டை விரியன்
சுருட்டை அளவில் சிறியதாக இருந்தாலும், இது மிகவும் வேகமாகவும் ஆக்ரோஷமாகவும் தாக்கக்கூடியது. விவசாய நிலங்களில் இவை அதிகம் காணப்படுவதால், கிராமப்புறங்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.














Click it and Unblock the Notifications