இனப்பெருக்க நேரத்தில் சீண்டல்.. டென்ஷன் ஆன சிங்கம்.. அடுத்த நொடியே காட்டில் கேட்ட அந்த மரண அலறல்
காந்திநகர்: குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் அங்கு நீங்கவில்லை.. வனவிலங்குகளை தொந்தரவு செய்தால், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.. இந்த பயங்கர சம்பவம் குறித்து வனத்துறையினர் சில கருத்துக்களை சொல்லி உள்ளனர்.
அம்ரேலி மாவட்டத்தில் லிலியா தாலுகா, லுவாரியா வனக் காப்பகம் மற்றும் அந்தால்யா பகுதியின் எல்லைக் காட்டுக்குள் இப்படியோரு சம்பவம் நடந்துள்ளது.

அம்ரேலி பகுதியைச் சேர்ந்த 21 வயதான சோஹில் மெமான் என்ற இளைஞர், தன்னுடைய நண்பர்கள் சிலருடன் இணைந்து காட்டுக்கு சென்றுள்ளார். அதாவது தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாகவே நுழைந்துள்ளார்.
சிங்கம் இனப்பெருக்கம்
பொதுவாகவே கிர் சரணாலயத்திற்கு வெளியே உள்ள காப்புக்காடுகளில் சிங்கங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.. ஆனால், வனத்துறையினரின் எச்சரிக்கையையும் மீறி, இந்த பகுதியில் தங்களுக்கு தெரிந்த வழிகள் மூலம் அந்த இளைஞர்கள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்..
நேற்று முன்தினம் இரவு 7.30 மணி முதல் 8 மணிக்குள் காட்டுப்பகுதியில் அவர்கள் சென்றபோது, அடர்ந்த புதர்களுக்கு இடையே ஒரு ஆண் சிங்கமும், பெண் சிங்கமும் ஒன்றாக இருப்பதை பார்த்துள்ளனர்
ஆக்ரோஷமாக பாய்ந்த ஆண் சிங்கம்
அப்போது அந்த சிங்கங்கள் தங்களின் இனப்பெருக்கக் காலத்தில் மிகவும் ஆக்ரோஷமான சூழலில் இருந்துள்ளன. பொதுவாகவே விலங்குகள் இதுபோன்ற நேரங்களில் தங்களை யாராவது தொந்தரவு செய்தால் உச்சக்கட்ட டென்ஷனாகிவிடுமாம்.. ஆனால் இது தெரியாத அந்த இளைஞர்கள், சிங்கங்களை கிட்ட சென்று பார்ப்பதற்கு ஆசைப்பட்டுள்ளனர்.. அத்துடன் தங்களின் செல்போன்களில் போட்டோ, வீடியோக்களை எடுப்பதற்கும் முயற்சி செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், சத்தம் எழுப்பியும், ஃபிளாஷ் லைட் அடித்தும் சிங்கங்களின் கவனத்தை ஈர்க்க முயன்றதாக தெரிகிறது.. இளைஞர்கள் இப்படி தொடர்ந்து அத்துமீறலும், ஆத்திரமூட்டலும் செய்தபடியிருந்ததால், அங்கிருந்த ஆண் சிங்கத்திற்கு கோபம் வந்துவிட்டது.
கடித்து குதறி இழுத்து சென்ற உடல்
இதனால் திடீரென அந்த ஆண் சிங்கம் சோஹில் மெமான் மீது பாய்ந்து குதறத் தொடங்கியது. சிங்கத்தின் ஆக்ரோஷத்தை பார்த்து நிலைகுலைந்த மற்ற நண்பர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்கள்.. இதனால்தான் அவர்கள் உயிர் பிழைத்துள்ளனர்.. ஆனால், சிங்கத்தின் பிடியில் சிக்கிய சோஹில் மெமானால் தப்பிக்க முடியவில்லை..
அந்தச் சிங்கம் இளைஞரை கொடூரமாகத் தாக்கி, அவரது உடலை காட்டுக்குள் நீண்ட தூரம் இழுத்துச் சென்றது. அதுவும் இல்லாமல் உயிரிழந்த அந்த உடலின் அருகிலேயே, அந்த சிங்கம் நீண்ட நேரமாக நின்றுகொண்டேயிருந்தது.. இதனால் வனத்துறையினர் உடனடியாக உடலை மீட்க முடியாத சூழல் உருவானது.
2 பேர் கைது
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஷெத்ருஞ்சி கோட்டத்தின் துணை வனப் பாதுகாவலர் சிராக் அமின் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சிங்கத்துடன் போராடி இளைஞரின் உடலை மீட்டனர். பிறகு அதனை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காகவும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிங்கத்தை பார்க்க சென்றதுடன், அதனுடன் அத்துமீறி நடந்து கொண்ட, அந்த கும்பலில் இருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. மற்றவர்களையும் அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்போனில் கிடைத்த தடயங்கள்
கைது செய்யப்பட்ட இளைஞர்களின் செல்போன்களையும் ஆய்வு செய்துள்ளனர்.. அதில் சட்டவிரோதமாக சிங்கத்தை எடுத்த போட்டோக்கள், வீடியோக்களை பயத்தில் அழித்திருப்பதும், சில தரவுகள் பார்மட் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. நீக்கப்பட்ட அந்தப் பதிவுகளை மீட்டெடுக்க, அந்த செல்போன்கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
சிங்கம் இயற்கையாக காணப்பட்டால் அதை நோட்டமிடுவது தவறல்ல.. ஆனால் அதன் வாழ்விடத்திற்குள் நுழைந்து பின்தொடர்வது, தொந்தரவு செய்வது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான குற்றமாகும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, கடந்த 20 நாட்களில் மட்டும் இந்த பகுதியில் குறைந்தது 4 முறை சிங்கங்கள் மனிதர்களைத் தாக்கிய சம்பவங்கள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது...!!














Click it and Unblock the Notifications