தவளை வாய் ஆந்தை தெரியுமா அங்கிள்? 12 வயதில் ஒரு வனவிலங்கு புகைப்படக் கலைஞர்!
மதுரை: 12 வயது சிறுவன் ஒருவன் வனவிலங்குப் புகைப்படக் கலையில் ஈடுபட்டு வருவது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. கூடவே இந்த இளம் வயதில் இந்தியாவைக் கடந்து இந்தச் சிறுவன் எகிப்து வரை சென்று பிரமிடுகளைக்கூடப் படம் எடுத்து வந்துள்ளான்.
காட்டு விலங்குகள் பற்றிக் கதை கேட்டு வளர வேண்டிய வயதில் ஒரு சிறுவன், சாகசம் நிரம்பிய வனப்பகுதிகளுக்குள் சென்று வனவிலங்குகளைப் புகைப்படம் எடுத்து வருகிறார். பொதுவாக இந்தத் துறையில் அதிக வயதும் அனுபவமும் உள்ளவர்களே தாக்குப் பிடிப்பது கஷ்டம். ஏனென்றால் வனவிலங்குகளைப் படம் எடுப்பதற்காக நாம் பல மணிநேரம் காட்டுக்குள்ளாகவே காத்துக் கிடக்கவேண்டும்.

நாம் நினைக்கும் நேரத்தில் வனவிலங்குகள் வராது. காட்டுப் பறவைகள் கூட அப்படித்தான். சின்ன மனித அசைவுகளைக் கூட அவை கவனித்துவிடும். அதன் சத்தம் கேட்டு திரும்புவதற்குள் அது பல மைல் பறந்துவிடும்.ஆகவே வனவிலங்குகளை அல்லது பறவைகளைப் படம் எடுப்பவர்களுக்கு முதலில் பொறுமை அவசியம். சத்தம் போடாமல் அமைதியாக நாம் சிலை போல உட்கார்ந்திருக்க வேண்டும்.
அப்படி அமைதி காத்தால்தான் ஒரு பறவையை நாம் சந்திக்க முடியும். பறவையைக் கூட விரைவில் சந்தித்துவிடலாம். ஆனால் காட்டுக்குள் ஒரு புலியை அல்லது சிங்கத்தைக் காண்பது மிகமிக கஷ்டம். 30 ஆண்டுகளாக வனவிலங்கு புகைப்படக் கலைஞராக வலம் வரும் பலர் காட்டில் புலியைப் பார்க்க முடியாமல் திரும்பிய கதைகள் ஏராளம்.
ஆனால், மதுரையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் தேவ் இந்த வனவிலங்கு போட்டோகிராஃபி துறையில் அசத்தி வருகிறான். அவனிடம் பொறுமை மட்டுமே இல்லை, பல லட்சங்கள் மதிப்புள்ள புகைப்படக் கருவிகளை வைத்துள்ளான். கூடவே தூரத்தில் விருட்டென்று பறக்கும் பறவையைப் படம்பிடிப்பதற்காக விலை உயர்ந்த பல ஜென்ஸ்களை வைத்துள்ளான்.
அது மட்டும் இல்லை. அந்த வனவிலங்குகளைப் படம் எடுக்கும் கேமிராக்கள் அதிக எடை கொண்டவை. கையில் கொஞ்ச நேரத்திற்கு மேல் தாங்கிப் பிடிக்க முடியாது. கை வலி எடுத்துவிடும். பெரியவர்களுக்கு அது சவால் நிறைந்த காரியம். அதில் சாதிக்கத் தொடங்கி உள்ளான் தேவ்.

என்ன மாதிரியான வனவிலங்குகளைப் படம் எடுத்து உள்ளேன் என்பதைப் பற்றி அந்தச் சிறுவன் பேசி இருக்கிறான். தனது அனுபவம் பற்றிப் பேசியுள்ள இளம் வனவிலங்குப் புகைப்படக் கலைஞர் தேவ், "அதிகமாகப் பறவைகளைத்தான் நான் புகைப்படங்கள் எடுத்து வருகிறேன். கூடவே இப்போது கொஞ்சம் வனவிலங்குகளையும் சேர்த்து எடுக்க ஆரம்பித்திருக்கிறேன்.
காட்டு விலங்குகளைப் போலவே கட்டடக் கலை மீதும் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. ஆகவே, தாஜ்மஹாலை விதவிதமாக படம் எடுத்திருக்கிறேன். எகிப்து போய் அங்குள்ள பிரமிடுகளை வகைவகையாக படங்கள் எடுத்துள்ளேன். சமீபத்தில் கேரள மாநிலத்தில் உள்ள தோட்டக்காடு போய் இருந்தேன். அங்கே தவளை வாய் ஆந்தை என்று ஒரு தனித்தன்மையான பறவை அங்கு ஒன்று உள்ளது.
அதை ஆங்கிலத்தில் Sri Lanka frogmouth என்று சொல்வார்கள். அதை வேறு எங்கேயும் பார்க்க முடியாது. அது ஒரு ஆந்தைப் பறவை. அதை நான் படம் எடுத்துள்ளேன். அதேபோல வரிக்குதிரை, கழுதை, சிங்கம் எனப் பல விலங்குகளைப் படம் எடுத்துள்ளேன். என்னிடம் அதிகமாக உள்ளது பறவையினங்கள் சாந்த புகைப்படங்கள்தான்" என்று கூறியுள்ளார் தேவ்.

இந்தச் சிறுவனுக்கு வனவிலங்கு புகைப்படக் கலைக்கு ஈடாக ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே லட்சியமாக உள்ளது. அதற்காக திட்டமிட்டுத் தான் படித்து வருவதாகவும் சொல்கிறான் இந்தச் சுட்டிச் சிறுவன். இந்த இளம் வயதில் சிறுவன் தேவ் தனது லேப் டாப்பில் கேம்ஸ் ஆடுவதில்லை. அந்த மடிக்கணினி முழுவதும் வனவிலங்குகள், பறவைகள் படங்களாகக் கொட்டிக் கிடக்கின்றன.
வரிக்குதிரை, ஆந்தை, சிங்கம், ஓநாய், நாரைகள், கரடி என்று எத்தனை வகையான விலங்குகளை இந்தச் சிறுவன் தன் கேமிராவுக்குள் அடக்கிக் கொண்டு வந்துள்ளான். இதைவிட இந்தியாவைத் தாண்டி எகிப்து, இலங்கை என்று பல நாடுகளுக்கும் இந்த 12 வயதில் பயணம் செய்து காடுகளை ஒரு கழுகைப் போல வட்டமிட்டு படங்களை எடுத்துள்ளான்.
இந்த வனவிலங்குகளைப் படம் எடுப்பதற்கான தனி உடைகள், காலணிகள் என அனைத்தையும் தரமாக வாங்கி வைத்துள்ளார் தேவ். வருங்காலத்தில் இந்தச் சிறுவன் சர்வதேச அளவில் சாதிப்பான் என்பது அவனது புகைப்படங்களே சொல்கின்றன. அதில் அத்தனை துல்லியம், அவ்வளவு நேர்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications