சட்டமன்ற தேர்தலுக்கு வேகமாக ரெடியாகும் தேமுதிக.. பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிகவில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட நிர்வாக ரீதியான 9 மாவட்டங்களில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பாஜகவோடு கூட்டணியை முறித்திருந்த அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதி செய்துள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு உள்ளது அதிமுக.

DMDK Appoints In-Charges for 36 Constituencies Ahead of 2026 Assembly Elections

தேமுதிக தீவிரம்

இந்நிலையில், தேமுதிக தனது கட்சியின் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக மாற்றி அமைத்து வருகிறது. தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி தருமபுரியில் நடைபெற்றது. இதில், தேமுதிக மாநில இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும், தேமுதிகவின் துணை செயலாளராக இருந்த எல்.கே. சுதீஷ் பொருளாளராகவும், அவைத்தலைவராக மருத்துவர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.

சமீபத்தில், தமிழக முழுவதும் மண்டல பொறுப்பாளர்களை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

அதன்படி சென்னையில் பெரம்பூர் தொகுதி பொறுப்பாளராக கிறிஸ்டோபர் ஜெயக்குமார், கொளத்தூர்- கோவிந்தராஜ், திருவிக நகர்- அம்சா நந்தினி, திருவொற்றியூர்- ஆரோக்கிய ராஜ், ஆர்.கே.நகர் - கண்ணன், ராயபுரம் - அம்சா, மதுரவாயல் - சிவக்குமார், அம்பத்தூர் - நாகூர் மீரான், விருகம்பாக்கம் - மாரி, வேளச்சேரி - கலா, சோளிங்கநல்லூர் - ஜெய்சங்கர், ஆலந்தூர்- செல்வஜோதிலிங்கம், எழும்பூர்- பிரபு, துறைமுகம்- அருண், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி- செல்வக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட நிர்வாக ரீதியான 9 மாவட்டங்களில் உள்ள 36 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த பாக்கிய செல்வராஜை, அந்த பதவியில் இருந்து விடுவித்துவிட்டு அந்த பொறுப்புக்கு முத்துக்காளையை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

கூட்டணி திட்டம்

கடலூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறும் மிகப்பெரிய மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவுகளையும் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அன்புமணி ராமதாஸ், சண்முகம், சந்திரசேகரன், எம்.எம்.அப்துல்லா, பி.வில்சன், வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து மீண்டும் 6 பேர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்?

அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளின் உதவியோடு 2 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா தேர்தல் வாய்ப்பு தருவதாக, கடந்த லோக்சபா தேர்தலின்போது தேமுதிகவுக்கு வாய்மொழி உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி தங்களுக்கு சீட் கிடைக்கும் என தேமுதிக எதிர்பார்ப்பில் உள்ளது.

ஆனால், அப்படி எதுவும் உத்தரவாதம் தரவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியே கூறினார். இதனால், அதிமுக இந்த விவகாரத்தில் என்ன முடிவை எடுக்கப்போகிறது? ராஜ்யசபா எம்.பி சீட் தராவிட்டால் தேமுதிக என்ன முடிவை எடுக்கும் என்பதெல்லாம் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+