பழம் கனிந்தது..பாலில் விழுந்தது! பத்தாண்டுகள் கழித்து பலித்த கலைஞர் வார்த்தை! சாத்தியமானது எப்படி?
சென்னை: அரசியல் கணிப்புகள், யூகங்கள் இவற்றையெல்லாம் பொய்யாக்கி திமுக கூட்டணியில் முதன்முறையாக இணைந்து இருக்கிறது தேமுதிக. பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை என 2016 இல் கலைஞர் கருணாநிதி சொன்ன நிலையில் பத்தாண்டுகளுக்கு பிறகு அது நடந்திருக்கிறது. சாத்தியப்படாது என நினைத்த தேமுதிக - திமுக கூட்டணியை வெற்றிகரமாக உருவாக்கி இருப்பது திமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான எவா வேலு என்கின்ற திமுகவினர்.
2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி உருவாகி இருக்கும் நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிக எந்த கட்சி உடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. ஏற்கனவே பாஜக, அமுமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்த தேமுதிக ஒரு முறை கூட திமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை.
விஜயகாந்த் இருந்தபோது 2011 இல் 2016இல் திமுக தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால் அப்போதைக்கு அது சாத்தியப்படவில்லை. குறிப்பாக 2016 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் தேமுதிக கூட்டணிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

2026 சட்டமன்ற தேர்தல்
அப்போதைய திமுக தலைவர் ஆன கலைஞர் கருணாநிதி, "பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை." என சொன்னார். ஆனால் திடீரென விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்ததோடு எதிர்க்கட்சித் தலைவர், எம்.எல்.ஏ பதவியையும் இழந்தார். 2021ல் ஜெயலலிதா - கலைஞர் இல்லாமல் சட்டமன்றத் தேர்தல் நடந்த போது தேமுதிக டிடிவி தினகரனின் அமுமுகவுடன் சந்தித்து படுதோல்வியை சந்தித்தது.
பிரேமலதா விஜயகாந்த் முடிவு
இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற கேள்வி பலமாக எழுந்தது. தேமுதிக, திமுக, அதிமுக, தவெக என அனைத்து கட்சிகளுடன் கூட்டணி பேசி வந்தது. 10 சீட்டு ,ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்ற கோரிக்கை தான் பிரதானமாக இருந்தது. கூடுதலாக பாஜக கூட்டணிக்கு வந்தால் மத்திய இணை அமைச்சர் பதவியை பிரேமலதா விஜயகாந்த் கேட்டதாக சொல்லப்படுகிறது.
திமுக தேமுதிக கூட்டணி
இதற்கிடையே கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் எஸ்பி வேலுமணியும் பிரேமலதா விஜயகாந்த் ஒன்றாக பங்கேற்ற நிலையில் அந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டதாகவே சொல்லப்பட்டது. இந்த நிலையில் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக திடீரென இன்று திமுக கூட்டணியில் இணைந்து இருக்கிறது தேமுதிக. திமுக தலைவர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்த தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் ஆகியோர் கூட்டணியை உறுதி செய்திருக்கின்றனர்.
கலைஞர் கணிப்பு
பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை என 2016 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி சொன்ன வார்த்தை பத்தாண்டுகள் கழித்து 2026 இல் நிகழ்ந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த கூட்டணியை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் அமைச்சர் எவ வேலு என சொல்லப்படுகிறது. திருவண்ணாமலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எவ வேலு சமுதாய ரீதியாக பிரேமலதா விஜயகாந்த் உறவினர் என சொல்லப்படுகிறது.
எவ வேலு பங்கு
அந்த அடிப்படையில் பல மாதங்களாக எவ வேலு பிரேமலதா விஜயகாந்த் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். மேலும் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி விற்கப்பட்டதில் எவ வேலுவின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே பொருளாதார ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் பிரேமலதா விஜயகாந்த் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த எவ வேலு தான் அவரை தற்போது திமுக கூட்டணிக்கும் கொண்டு வந்திருக்கிறார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications