விஜயகாந்துக்கு டைனிங் டேபிளில் சாப்பிடப் பிடிக்காது! தரையில் சப்பணம் போட்டு அமர்ந்து தான் சாப்பாடு!
சென்னை: வசதி வாய்ப்புக்கு குறைவில்லாமலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், சினிமா, அரசியல் என 2 துறைகளிலும் பெயர், பணம், புகழை சம்பாதித்திருந்தாலும் கடைசி வரை எளிய வாழ்க்கை முறையையே பின்பற்றியவர் விஜயகாந்த்.
ஆக்டிவாக இருந்த வரை டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவதை முற்றிலும் விரும்பாதவர் விஜயகாந்த். தரையில் சப்பணம் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் தான் சாப்பிட்டது போல் இருக்கும் என அவரே பலமுறை பேட்டிகளில் கூட குறிப்பிட்டுள்ளார். அதேபோல் வீட்டில் இருந்தால் தனது மனைவி, மகன்களுடன் எப்போதும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதற்கு காரணம் விஜயகாந்த் வளர்ந்த முறை அப்படி. விஜயகாந்தின் சகோதரர், சகோதரிகள் என மொத்தம் 11 பேர், அவர்கள் எல்லோரும் மதுரையில் உள்ள பூர்விக வீட்டில் ஒன்றாக அமர்ந்து கதை பேசிக்கொண்டே சாப்பிட்டு வளர்ந்தவர்கள். அந்த பழக்கம் விஜயகாந்துக்கு விட்டுப் போகவில்லை, வீட்டில் டைனிங் டேபில் இருந்தாலும் மனைவி, மகன்களுடன் தரையில் அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்ட பிறகு தான் தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை அவர் கைவிட்டார்.
இதனிடையே கடந்த 2018ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்ட விஜயகாந்த், அங்கிருந்து சென்னிமலை வழியாக மதுரைக்கு காரில் பயணித்தார். அவருடன் தேமுதிக முக்கிய நிர்வாகிகள் சிலரும் பயணித்தனர்.
மதியம் 2.30 மணி அளவில் சென்னிமலையை அடுத்த நொய்யல் ஆற்றங்கரையோரம் காரை நிறுத்தச் சொன்ன விஜயகாந்த், சிறிதும் யோசிக்காமல் சாலையோரம் இருந்த தென்னை மர நிழலில் நின்று மதிய உணவு சாப்பிட தொடங்கினார்.
தலையில் முண்டாசை கட்டிக் கொண்டு பாக்கு மட்டை தட்டில் பரிமாறப்பட்ட உணவை, வாழை இலையில் போட்டு நின்று கொண்டேச் சாப்பிட்டார். இதனைப் பார்த்த நிர்வாகிகள் பதறிப்போய் இன்னும் சில கிலோ மீட்டர் தூரத்தில் சாப்பிட இடம் தயார் செய்யப்பட்டிருப்பதாக கூறியும், இதுவே எனக்குப் போதும் எனக் கூறிய எளிமையை வெளிப்படுத்தினார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications