அனைத்து அணி செயலாளர்களும் வாங்க.. ஆலோசனை கூட்டத்துக்கு திமுக தலைமை அழைப்பு.. என்ன மேட்டர்?
சென்னை: வரும் அக்டோபர் 23ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மாலை தி.மு.கழகத்தின் அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " "நீட்" தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில், திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில், தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் "நீட் விலக்கு, நம் இலக்கு" எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை 21.10.2023 அன்று காலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து முதல் கையெழுத்திட்டார்.

நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில், இக்கையெழுத்து இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக, தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமம் முதல் பட்டணக்கரை கொண்டு சென்றிட ஏதுவாக, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், வருகிற 23.10.2023 திங்கட்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில், "தி.மு.கழகத்தின் அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்" காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கழக அனைத்து அணிச் செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தற்கொலைகளை தடுக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திமுக போராட்டங்களை அவ்வபோது நடத்தி வருகிறது. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று திமுக சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். ஒவ்வொரு கையெழுத்தும் மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நீட் தேர்வை ஒழிக்க மக்கள் இயக்கமாக ஓரணியில் திரள்வோம் எனத் தெரிவித்திருந்தார். அதன்படி, திமுக இளைஞரணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில் நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்படவுள்ளது. இந்த கையெழுத்து ஆவணங்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக திமுகவில் உள்ள அனைத்து அணிகளின் செயலாளர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications