அதிருப்தியில் திமுக கூட்டணி கட்சிகள்.. தேர்தலுக்கு முன் வெளியேறுவார்கள்.. ஜெயக்குமார் சூசகம்!
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலை வரும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையில் அதிமுகவின் தொகுதி அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் கூறுகையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அதிமுக ஆட்சியில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜெயக்குமார் பேட்டி
அதன்பின்னர் ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு, இறுதியாக நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் திமுக ஆட்சியில் மசோதா நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்றத்தின் மாண்பு என்பது கட்சிக்கு ஒருவர் மட்டும் தான் பேச அனுமதிக்கப்பட்டு வந்தது. அதுதான் சட்டசபையிம் மரபு. ஆனால் சட்டசபையில் மரபும், மாண்பும் காற்றில் பறக்கவிடப்பட்ட சம்பவம் வேதனைக்குரிய விஷயம். அதிமுக நிலைப்பாட்டை தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

ஓபிஎஸ் அப்படி சொல்லலாமா?
ஆனால் எதனடிப்படையில் ஓபிஎஸை பேச சபாநாயகர் அனுமதித்தார் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அதிமுகவின் கருத்தை எப்படி ஓபிஎஸ் பேச முடியும்? அதிமுக எம்எல்ஏ-க்கள் அடிப்படையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் பேச அனுமதித்ததாக சபாநாயகர் கூறியுள்ளார். அதற்காக முன்னாள் முதல்வர்கள் ஏராளமானோர் இருந்தால் அனைவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

சசிகலா பற்றி கருத்து
அதேபோல், அந்த மரபு எந்த காலக்கட்டத்திலும் இல்லை. அதிமுக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு பின், ஓ.பன்னீர்செல்வத்தை எந்தக் கட்சியையும் சாராதவர் என்று அறிவித்திருக்க வேண்டும். அதனையும் சபாநாயகர் அப்பாவு செய்யவில்லை என்று தெரிவித்தார். பின்னர் அதிமுக தோல்வி பற்றிய சசிகலாவின் கருத்து பற்றிய கேள்விக்கு, அதிமுகவுக்கு சம்மந்தம் இல்லாத நபரான சசிகலா கருத்து கூறுவதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சொன்னதையே சொல்லும் தேய்ந்த ரெக்கார்ட் போல் சசிகலா பேசி வருகிறார் என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணி உடையும்
தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் பற்றிய கேள்விக்கு, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைவரும் எந்த பிரச்சனைக்கும் போராட்டம் கூட நடத்துவதில்லை. ஆட்சியாளர்கள் தவறு செய்யும் போது விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகள் போராட வேண்டும். ஆனால் இதுவரை அப்படி எதுவும் அவர்கள் செய்யவில்லை, அதேபோல், திமுக கூட்டணியில் உள்ள விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கடுமையான அதிருப்தியில் உள்ளனர். அதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலை வரும். 22 மாதங்களுக்கு பின்னரும் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பவில்லை என்றால், மக்கள் அவர்களை மறந்துவிடுவார்கள் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications