‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபி பெறுவதற்கான தடையை எதிர்த்து திமுக சார்பில் மேல்முறையீடு! நாளை விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கவில்லை, தவறான தகவலை அளித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி எண் பெற இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

DMK Appeals in Madurai HC Against Case Over Getting OTP in Oraniyil Tamil Nadu

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ஆளுங்கட்சியான திமுக, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி வருகிறது. இதற்காக திமுகவினர் அனைத்து வீடுகளுக்கும் சென்று, வீட்டில் இருப்பவர்களிடம் பல்வேறு ஆவணங்களைக் கேட்டு துன்புறுத்துகின்றனர். அனுமதி பெறாமல் வீட்டில் முதல்வர் படத்துடன் 'ஓரணியில் தமிழ்நாடு' என அச்சிடப்பட்ட சுவரொட்டியை ஒட்டுகின்றனர்.

குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பிற அடையாள அட்டைகளைக் கேட்கின்றனர். அந்த ஆவணங்களைத் தர மறுத்த பெண்களிடம், மாதந்தோறும் அரசிடம் பெற்று வரும் ஆயிரம் ரூபாயை நிறுத்திவிடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர் தனிப்பட்ட செல்போன் எண்களைப் பெற்று பதிவு செய்தனர். செல்போனுக்கு வந்த ஓடிபியை (ஒன் டைம் பாஸ்வேர்டு) கேட்டுப் பெற்று திமுக உறுப்பினர்களாகச் சேர்க்கின்றனர்.

இவ்வாறு அரசியல் காரணங்களுக்காக ஒருவரின் அனுமதியில்லாமல் பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது குற்றச்செயலாகும். எனவே, பொதுமக்களிடமும் இருந்து ஆதார் விவரங்களை திமுகவினர் சேகரிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்கவும், எந்த காரணத்துக்காகவும் ஆதார் விவரங்களைச் சேகரிக்கக் கூடாது என்றும், இதுவரை சேகரித்த ஆதார் மற்றும் தனிப்பட்ட விவரங்களை உடனடியாக அழிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருந்தார்.

இந்த மனு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "பொதுமக்களின் தனி்ப்பட்ட தகவல்களை சேகரிப்பது, ஓடிபி எண் கேட்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது, குற்றச்செயலாகும்" என வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஓடிபி விபரங்களை யாருடனும் பகிர வேண்டாம் என போலீசார் பொதுமக்களை எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்காக ஏன் ஓடிபி எண் கேட்க வேண்டும்? ஆதார் விவரங்களை சேகரிக்கும் தனியார் நிறுவனம் பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றால் என்ன செய்வது? இந்திய மக்கள் இவ்வாறுதான் கையாளப்படுவார்களா?

கட்சிகள் உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம் நடத்துவதில் தவறில்லை. அப்போது பெறப்படும் தனிப்பட்ட தகவல்கள் எப்படி கையாளப்படும், எப்படி பாதுகாக்கப்படும், எவ்வாறு அழிக்கப்படும் என்பது தொடர்பான உறுதியான எந்த திட்டமும், விவரங்களும் இல்லை. மக்களின் தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தொழில்நுட்ப தகவல் பாதுகாப்பு விதிகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை. இது மிகவும் ஆபத்தானது.

தனிநபர் விபரங்களை பாதுகாப்பது அரசியலமைப்பின் கடமை. 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் நடைபெறும் உறுப்பினர் சேர்ப்பு பணியில் தனிநபர் விவரங்களை சேகரிக்க தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வாக்காளர்களின் தனிநபர் விபரங்கள் பாதுகாக்கப்படுவது அவசியம். எனவே திமுகவினர் நடத்தி வரும் உறுப்பினர் சேர்க்கையின்போது பொதுமக்களிடம் ஓடிபி எண் பெற இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அதேநேரத்தில் உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம்.

இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. தேர்தல் ஆணையம் டிஜிட்டல் முறையில் தனிநபர் தகவல் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பது குறித்து பதிலளிக்க வேண்டும். மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 2 வாரங்களில் பதில் தர வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் ஆதார் விபரங்கள் எதுவும் வாங்கவில்லை. தவறான தகவலை அளித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

"ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஓடிபி பெறுவதாக தவறான தகவலை நீதிமன்றத்தில் கூறி தடை உத்தரவை அதிமுகவினர் பெற்றுள்ளனர். ஆனால், உறுப்பினர் சேர்க்கை சம்மதம் பெறவே, செல்போன் எண் கேட்டு OTP பெறப்பட்டது. வேறு எந்த ஆவணமும் வாங்கவில்லை" என திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் எம்.பி. வில்சன் முறையீடு செய்துள்ளார்.

இதனை மனுவாகத் தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மனுவாக தாக்கல் செய்வதற்கான நடைமுறைகள் நடப்பதாகத் தெரிகிறது. நாளை இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+