திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி.. தொகுதி பங்கீடு குறித்து பிறகு பேசுவோம்.. செல்வப்பெருந்தகை பேட்டி!
சென்னை: முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக - காங்கிரஸ் இடையில் கூட்டணி இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறிய செல்வப்பெருந்தகை, தொகுதி பங்கீடு குறித்து பின்னர் கூறுவோம் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி, தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியது. காங்கிரஸ் மூத்த நிர்வாகி கிரிஷ் சோடங்கர் விஜய்யுடன் சந்திப்பு நடத்தியதாகவும் கூறப்பட்டது. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இந்த தகவலை முற்றிலுமாக புறந்தள்ளினார்.

இதையடுத்து திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணியை உறுதி செய்யும் வகையில், காங்கிரஸ் தலைமை தரப்பில் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. கிரிஷ் சோடங்கர் தலைமையிலான அந்தக் குழுவில் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் சூரஜ், எம்.என்.ஹெக்டே, நிவேதிக் ஆல்வா மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
சில நாட்களுக்கு முன்பாக இந்த குழு நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. இதையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசி இருக்கின்றனர். இந்த சந்திப்பின் போது கிரிஷ் சோடங்கரும் உடனிருந்தார். இதனிடையே காங்கிரஸ் கட்சி தரப்பில் திமுக கூட்டணியில் 40 தொகுதிகள் கோரி கடிதம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பின் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், காங்கிரஸ் கட்சி தலைமை 5 பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தது. இன்று கிரிஷ் சோடங்கர் தலைமையில் இந்தக் குழு முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளது. திமுக தரப்பில் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்ட பின், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்.
கிழக்கா, மேற்கா, வடக்கா, தெற்கா என்று பலருக்கும் சந்தேகங்கள் இருந்தது. தற்போது அந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது. முதல்வர் ஸ்டாலினும் மகிழ்ச்சிதான். தொகுதி பங்கீடு எண்ணிக்கை பற்றி பிறகு பேசலாம். அதேபோல் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அதனால் கூட்டணி பிரியாது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications