குதிரை பேரம் செஞ்சீங்களா? படாரென கேட்ட ஆளுநர்.. பதிலே அனுப்பாமல் கைகழுவிய தவெக அரசு? திமுக ஷாக்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் அரசு, சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்கவும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியான திமுக அடுக்கடுக்கான புகார்களை எழுப்பி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை, திமுகவினர் ஏற்கனவே சந்தித்து முறையிட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் சந்தித்து ஆதாரங்களுடன் புகார் மனு அளித்துள்ளனர்.

அரசு தரப்பின் மௌனம்
திமுக முதன்முதலில் புகார் அளித்தபோதே, இந்த விவகாரத்தை ஆளுநர் அர்லேக்கர் தீவிரமாக எடுத்துக்கொண்டார். இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகிய இருவருக்கும் ஆளுநர் மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வமாகக் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
இருப்பினும், இந்த விவகாரத்தில் அரசு தரப்பிலிருந்தோ அல்லது சபாநாயகர் அலுவலகத்திலிருந்தோ இதுவரை எந்தவிதமான விளக்கமும், பதிலும் ஆளுநருக்கு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் மௌனம் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களையும், சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.
2வது முறையாக ஆளுநரைச் சந்தித்த திமுக
அரசு தரப்பில் எந்த பதிலும் தராத நிலையில், திமுகவின் முக்கியப் பிரதிநிதிகள் குழு அண்மையில் மீண்டும் ஆளுநர் அர்லேக்கரை நேரில் சந்தித்தது. இந்தச் சந்திப்பின் போது, தவெக அரசு தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதற்கான கூடுதல் ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பித்தனர்.
மேலும், நாங்கள் முதல் முறை கொடுத்த புகாரின் மீது ஆளுநர் மாளிகை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்ற கேள்வியையும் திமுகவினர் ஆளுநரிடம் நேரடியாக முன்வைத்தனர்.
இதற்குப் பதிலளித்த ஆளுநர் அர்லேக்கர், நீங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நான் ஏற்கனவே அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால், அங்கிருந்து இதுவரை எந்தவொரு பதிலும் வரவில்லை என்று தற்போதைய நிலவரத்தை திமுகவினரிடம் விளக்கியுள்ளார்.
பதில் தராவிட்டால் ஒப்புக்கொண்டதாக அர்த்தம்
ஆளுநரின் விளக்கத்தைக் கேட்ட திமுகவினர், தங்களது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆளுநரிடம் அவர்கள் பேசுகையில், நாங்கள் புகார் அளித்து, நீங்கள் விளக்கம் கேட்டும் தவெக அரசு பதில் அளிக்காமல் மௌனம் காக்கிறது என்றால், அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம் என வாதிட்டுள்ளனர்.
திமுகவின் அதிரடி முடிவு
தற்போது இரண்டாவது முறையும் நாங்கள் தகுந்த ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளோம். இதன் பிறகும் தவெக அரசு மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், நாங்கள் இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வோம். கோர்ட்டுக்குப் போய் சட்டப்படி இதைச் சந்திப்போம்.. என்று திமுகவினர் ஆளுநரிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டு வந்துள்ளனர்.
ஆளுநரின் அதிரடி திட்டம்
திமுக கொடுத்த இரண்டாவது புகாரைத் தொடர்ந்தும், ஆளுநர் அர்லேக்கர் தற்போதைய அரசுக்கு மீண்டும் ஒரு விளக்கக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
ஆனால், இந்த முறையும் அரசு தரப்பில் இருந்து முறையான பதில்கள் வராததால் ஆளுநர் கடும் அதிருப்தியிலும், வருத்தத்திலும் இருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, இன்னும் ஒரு வார காலத்திற்குள் தவெக அரசு இந்த விவகாரத்தில் ஆளுநரின் கடிதத்திற்குப் பதில் அளிக்கவில்லை என்றால், ஆளுநர் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்க வாய்ப்புகள் உள்ளன.
அரசு தரப்பின் முக்கியப் பொறுப்பாளர்களை நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு அழைத்து, தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்த ஆளுநர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் அடுத்த ஒரு வாரத்தில் தவெக அரசு எடுக்கப்போகும் பதிலும் , ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கையும் தான் தமிழக அரசியலின் அடுத்த திருப்பமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
- சிறப்பு நிருபர் எழில்














Click it and Unblock the Notifications