அதிமுக மாஜிக்கள்+ஆளுநர்.. “இன்னும் ஒப்புதல் வரலயே”: அமைச்சர் ரகுபதி எழுதிய பரபர கடிதம்! பலே வியூகம்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் விசாரணையை தொடங்க இசைவு ஆணைக்கான கோப்பு நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கேசி வீரமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்குவதற்கான இசைவு கோரிய ஒப்புதல் கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என்றும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள், ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன என்றும் குறிப்பிட்டு ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் அமைச்சர் ரகுபதி.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதன் காரணமாக அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக ஆளுநர் ரவி அண்மையில் உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு அனுமதி கோரி திமுக அரசு அனுப்பிய கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை குறிப்பிட்டு அதிமுகவுக்கும், ஆளுநருக்கும் ஒருசேர பிரஷர் கொடுத்துள்ளது திமுக அரசு.
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆளுநர் ஆர் என் ரவிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்களான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சி.பி.ஐ கோரியது.
மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐயின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது. ஆனால் துரதிருஷ்டவசமாக இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
இதேப்போன்று, மேலும் இரண்டு நிகழ்வுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், முன்னாள் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி மற்றும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரியது.

இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. முந்தைய அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட தேவையான இசைவு ஆணையை இதுவரை ஆளுநர் வழங்கவில்லை.
ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருப்பது தவிர, மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. இவற்றில் இரண்டு மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. எனவே, மேற்குறிப்பிட்டுள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதிக்காமல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணையையும், மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications