PMAY திட்டம் குறித்த பதிவில் பிழை.. டுவீட்டை நீக்கி வருத்தம் தெரிவித்த திமுக ஹபீசுல்லா
சென்னை: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்து தான் வெளியிட்ட பதிவில் பிழை இருப்பதாக கூறி நீக்கிவிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார் திமுக செய்தித்தொடர்பு மாநில இணை செயலாளர் சையது ஹபீசுல்லா.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - (PMAYU) குறித்து அண்ணாமலை பல்வேறு பொய்களை வாரி இறைத்திருந்தார். ஏற்கனவே உண்மைத் தகவலை தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுவிட்டது. எனினும் அண்ணாமலையின் புலன் விசாரணை அணியுடைய கண்களுக்கு புலப்படாத உண்மைகள் இருக்கின்றன. 2021 ஜனவரியில் ஒன்றிய அரசின் PMAYU வெளியிட்ட "Scheme Guidelines" படி PMAYU திட்டம் மூலமாக இந்தியாவில் கட்டப்பட்டுள்ள / கட்டப்படுகிற வீடுகளில் 35% வீடுகள் உயர்சாதி ஏழைகளுக்கு கட்டப்படுகிறது / கட்டப்பட வேண்டும்.

நாட்டில் 10% குறைவான மக்கள்தொகைக்கு 35% வீடுகளும், 90% க்கும் மேல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள்தொகைக்கு 65% வீடுகளும் கட்டப்பட்டுள்ளன/கட்டப்பட உள்ளன. அதுமட்டுமல்ல PMAYU திட்டத்தின் ஒரு பகுதியாக Credit Linked Subsidy Scheme(CLSS) உள்ளது. இதில் பயனாளிகள் 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதன்படி உயர்சாதி ஏழைகள் இடஒதுக்கீடு (EWS) என்றும், மற்ற அனைத்து பிரிவினரும் குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர் பிரிவு 1 & 2 என்றும் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதன் மூலம் 'தகுதியான' நபர்களுக்கு வழங்கப்படும் வீட்டு கடன் மூலமாக உயர்சாதி ஏழைகளுக்கு கட்டப்பட்டும் வீடுகளுக்கு 6.5% வட்டி மானியமாக வழங்கப்படுகிறது. கட்டாயமான ஒதுக்கீடு மூலமாக PMAYUவில் 35% வீடுகள் உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் CLSSல் உயர்சாதி ஏழைகள் பிரிவில் நிச்சயமான 6.5% வட்டி மானியம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மீதமிருக்கும் பிரிவுகளில் பயன்பெறவும், அதில் வழங்கப்படும் 3% & 4% வட்டி மானியத்தை பெறவும் உயர் சாதி ஏழைகள்(EWS) பிரிவினர் தகுதியுடையவர்கள் என்கிறது ஒன்றிய அரசு .
கல்வி நிறுவனங்கள் தொடங்கி அரசின் உயர்பதவிகள் வரை அனைத்து முடிவுகளிலும் இடஒதுக்கீடு முறையை தவிர்க்கும் ஒன்றிய அரசு, PMAYUல் மிக கண்டிப்பாக அதை பின்பற்றியிருக்கிறது. இது பற்றிய தகவல்களை விசாரித்து பொது வெளியில் பேசுவாரா Mr.IPS.???தமிழ்நாட்டிற்கு, ஒன்றிய அரசின் PMAYU திட்டம் மூலமாக எத்தனை வீடுகள் ஒதுக்கப்படுகிறது என்பதில் பிரச்னை. அந்த வீடுகள் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் பிரச்னை.
அப்படி ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு நிதி வழங்குவதில் பிரச்னை. நிதி வழங்குவதில் குளறுபடி செய்துவிட்டு, மாநில அரசு வழங்கும் சொந்த நிதியை பொய் எனக்கூறி அதில் ஒரு பிரச்னை என PMAYU திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மக்களுக்கு பாஜக அரசு ஒதுக்கிய வீடுகளையும், நிதியையும் விட பிரச்னைகளே அதிகம். பிரச்னைகளை அதிகம் கொடுத்தது நாங்கள் தான் என அண்ணாமலை உரிமைக்கோரி கொள்ளலாம். உண்மையும் அதானே." என்று குறிப்பிட்டு உள்ளார்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - (PMAYU) குறித்து அண்ணாமலை பல்வேறு பொய்களை வாரி இறைத்திருந்தார். ஏற்கனவே உண்மைத் தகவலை தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு வெளியிட்டுவிட்டது. எனினும் அண்ணாமலையின் புலன் விசாரணை அணியுடைய கண்களுக்கு புலப்படாத உண்மைகள் இருக்கின்றன." என்று குறிப்பிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் திமுக செய்தித்தொடர்பு மாநில இணை செயலாளர் சையது ஹபீசுல்லா எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அந்த பதிவை தற்போது நீக்கி இருக்கும் அவர், "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் EWS என்பது வேறொரு அர்த்தத்தை குறிக்கிறது. நான் முன்பு வெளியிட்ட ட்வீட் நிதி மற்றும் கல்விக்காக வழங்கப்படும் EWS இடஒதுக்கீட்டை குறித்துள்ளது. இந்த பிழைக்கு நான் முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். மன்னிக்கவும்." என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications