திமுகவிற்கு ஷாக்.. தபால் வாக்குகளில் அதிர்ச்சி வைத்தியம்? அரசு ஊழியர்களின் ‘மனநிலை’ மாறியது எப்படி?
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஜனநாயகத் திருவிழாவின் இறுதித் தீர்ப்பை அறிய ஒட்டுமொத்த தமிழகமும் தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களின் முன் தவமிருக்கும் நிலையில், முதல் கட்டமாக எண்ணப்பட்ட தபால் வாக்குகள் ஆளுங்கட்சியான திமுகவிற்கு ஒரு 'அதிர்ச்சி' கலந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.
தற்போது வரை எண்ணப்பட்டு உள்ள தபால் வாக்குகளில் திமுக 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வழக்கமாக தபால் வாக்குகள் என்றாலே அது திமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு பெரும்பாலும் உதயசூரியன் பக்கமே சாய்வது கடந்த கால வரலாறு. ஆனால், இன்று காலை நிலவரப்படி வெளிவரும் தகவல்கள் அந்தப் பிம்பத்தை உடைக்கும் வகையில் அமைந்துள்ளன.

தபால் வாக்குகளில் இழுபறி: புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தபால் வாக்குகளின் முடிவுகள் கசியத் தொடங்கின. மொத்தமுள்ள இடங்களில் திமுக கூட்டணி சுமார் 29 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 17 இடங்களில் வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளது. இது தவிர, முதன்முறையாக களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 2 இடங்களில் முன்னிலை பெற்று அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
எண்ணிக்கை அடிப்படையில் திமுக முன்னிலையில் இருந்தாலும், தபால் வாக்குகளில் அதிமுக மற்றும் தவெக பெற்றுள்ள இந்த 'கணிசமான' வாக்குகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமான சூழல் இல்லை என்பதையே காட்டுகின்றன.
அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருந்தது அம்பலம்?
"போஸ்டல் ஓட்டுகள் அதிமுகவுக்கு கணிசமாக விழுந்துள்ளன. அரசு ஊழியர்கள் அதிருப்தியில் இருந்தது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது" என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்குப் பின்னால் பல முக்கிய காரணங்கள் அடுக்குகப்படுகின்றன:
பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS): தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் அல்லது முட்டுக்கட்டைகள் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம். இதற்கு பின் திமுக கொண்டு வந்த TAPS ஓய்வூதிய திட்டம் பெரிதாக அரசு ஊழியர்களை ஈர்க்கவில்லை.
அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வு: அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதில் நிலவிய இழுபறி மற்றும் பல்வேறு சங்கங்களின் போராட்டங்கள் ஆளுங்கட்சிக்கு எதிராகத் திரும்பியிருக்க வாய்ப்புள்ளது.
மாற்று அரசியல் தேடல்: தவெக போன்ற புதிய சக்திகள் தபால் வாக்குகளில் தடம் பதிப்பது, இளைய தலைமுறை அரசு ஊழியர்கள் ஒரு மாற்றத்தை விரும்புவதைக் காட்டுகிறது.
அதிமுகவின் எழுச்சி
அதிமுக வலுவான நிலையில் தபால் வாக்குகளைப் பிரித்திருப்பது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அக்கட்சிக்கு ஒரு பெரிய ஊக்கமாகப் பார்க்கப்படுகிறது. "எங்கள் மீது அரசு ஊழியர்களுக்கு இன்னும் நம்பிக்கை குறையவில்லை" என்பதற்கு இதுவே சாட்சி என அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். குறிப்பாக, திமுகவின் வாக்கு வங்கியில் ஓட்டையை ஏற்படுத்த அதிமுக எடுத்துக்கொண்ட வியூகங்கள் வேலை செய்துள்ளன.
தவெக-வின் என்ட்ரி: புதிய சவால்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2 இடங்களில் முன்னிலை வகிப்பது இந்தத் தேர்தலின் மிகப்பெரிய ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. அரசுப் பணியில் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு, தபால் வாக்குகள் மூலம் வாக்குகளாக மாறியுள்ளது தெரிகிறது. இது வரும் காலங்களில் திராவிடக் கட்சிகளுக்கு ஒரு சவாலாக அமையும் என்பதில் ஐயமில்லை.
தபால் வாக்குகள் என்பது ஒரு சிறிய பகுதிதான் என்றாலும், அது 'மக்களின் மனநிலை' என்பதைத் தாண்டி 'நிர்வாக இயந்திரத்தின் மனநிலை'யைப் பிரதிபலிக்கிறது. தற்போது இவிஎம் (EVM) வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முழுமையான முடிவுகள் வரும்போதுதான் ஆட்சிப் பீடத்தில் அமரப்போவது யார் என்பது தெரியவரும். இருப்பினும், தபால் வாக்குகளில் அரசு ஊழியர்கள் காட்டியுள்ள இந்த முரண்பட்ட போக்கு, ஆளுங்கட்சிக்கு ஒரு சுயபரிசோதனைக்கான நேரமாகவே பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் அந்த இறுதி முடிவு இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்!












Click it and Unblock the Notifications