‛‛பால்வாடி’’ அரசியல்.. பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலை தகுதியில்லை.. விளாசிய திமுகவின் ராஜீவ் காந்தி
சென்னை: கோவை சம்பவத்தில் அண்ணாமலை அடிப்படை ஆதாரமற்ற விவரங்களை கூறி வருகிறார். அவர் பால்வாடி அரசியல் செய்து வருகிறார். பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலைக்கு தகுதியில்லை என திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி கடுமையாக விமர்சனம் செய்தார்.
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் ஜமோசா முபின் என்பவர் இறந்தார். இவரிடம் 2019ல் என்ஐஏ விசாரணை நடத்தி இருந்தது.
இதில் சதிச்செயல்கள் இருக்கலாம் என கருதப்பட்டது. மேலும் ஜமேஷா முபின் உடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி பேட்டி
இந்நிலையில் தான் கோவை கார் வெடிப்பு விஷயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, காவல்துறை, தமிழக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு பதிலடியாக தமிழக அரசு, காவல் துறை தரப்பில், அண்ணாமலை அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை கூறி வருகிறார் என விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உயிரை பணயம் வைத்த காவல்துறை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் கோமாளி. இவர் மிகவும் இக்கட்டான வழக்கில் தினந்தோறும் அறிக்கை வேண்டும் என்று அரசியல் பிழைப்புக்காக பேசி வருகிறார். இது கோமாளித்தனமானது. இன்று மதியம் அவர் வெளியிட்ட அறிக்கை காவல் துறையை களப்படுத்தும் வகையிலும், கொச்சைப்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளார். கோவையில் 23ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சம்பவம் நடந்தபோது எரிந்த காரை போலீசார் கைப்பற்றினார். உள்ளே வெடிக்குண்டு இருக்கிறதா என்பது தெரியாத நிலையில் காவல்துறை நண்பர்கள் உயிரை பணயம் வைத்து செயல்பட்டனர். இந்த காவல் அதிகாரிகளை இந்த சாதி, அந்த மதம் என அண்ணாமலை கூறி தொடர்ந்து உளறி வருகிறார்.

வாக்கு வங்கி அரசியலுக்காக..
உண்மையில் மக்கள் மீது அக்கறை இருந்தால் பாபர் மசூதி இடிப்புக்கு பிறகு கோவை மதஅடிப்படைவாதிகளால் இக்கட்டான சூழலுக்கு உள்ளானது. இந்த வேளையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த மக்களை சந்தித்து பேசி மதநல்லிணக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்துவது தான் ஒரு அரசியல் கட்சியின் கடமையாக இருக்க வேண்டும். மாறாக பாஜக பந்த் நடத்துவதாகவும், யாரும் தொழில் செய்ய வேண்டாம், கடையை திறக்க வேண்டாம் எனவும் கூறியது. சென்னைக்கு அடுத்து வளர்ந்து வரும் நகராக கோவை உள்ள நிலையில் வாக்கு வங்கி அரசியலுக்காக பாஜக இப்படி செயல்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் அண்ணாமலை போன்ற அரசியல் அனுபவம் இல்லாதவர்களின் செயல் மிகவும் வெட்கக்கேடானது.

முட்டாள்தனமான வாதம்
எந்தவொரு வழக்காக இருந்தாலும் சந்தேகம் இருந்தாலும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் கேள்விகள் கேட்கலாம். இல்லாவிட்டால் மக்களிடம் விளக்கம் அளிக்கலாம். ஆனால் காவல்துறை, மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் நீதிமன்றங்களின் நடவடிக்கைகளில் அரசியல் கட்சி தலையிடமுடியாது. அந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் அண்ணாமலை பேசுகிறார். சம்பவம் நடந்து 7 நாட்கள் ஆகியும் முதல்வர் பேசவில்லை என்கிறார். அக்டோபர் 27 ம் தேதி மாலையில் இந்த வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது 3 நாட்கள் ஆனநிலையில் பிரதமர் மோடி ஏன் பேசவில்லை என்று கேள்வி கேட்டால் முட்டாள்தனமான வாதமாக இருக்கும். இதுபோன்று தான் அண்ணாமலை கேள்வி எழுப்புகிறார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
சம்பவம் நடந்தபோது இரு மூத்த காவல் துறை அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். வழக்கில் பன்னாட்டு பயங்கரவாதம் இருக்கலாம் என்ற எண்ணத்தில் கிடைக்கப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில் வழக்கு மத்திய விசாரணை அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் பால்வாடித்தனமாக அரசியலை அண்ணாமலை பேசி வருகிறார். அண்ணாமலை தன்னை தக்கவைத்து கொள்ளும் நோக்கத்தில் மிகவும் இக்கட்டான, அசாதாரண சூழலில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

தலைவர் பதவிக்கு தகுதியில்லை
அண்ணாமலை 10 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். இது வாட்ஸாப் வதந்தி என்பார்கள். முபின் என்பவர் பயங்கரவாத அமைப்புடன் உள்ளார் என மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக அண்ணாமலை கூறியுள்ளார். இதுவரை அப்படி எதுவும் இல்லை. தமிழக அரசுக்கு இன்னும் கடிதம் வரவில்லை. முபின் யார் என்று இன்னும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. ஐஎஸ் எனும் பயங்கரவாத அமைப்பு இந்தியா முழுவதும் செயல்படுகிறது என்பதால் தான் UAPA சட்டம் திருத்தப்பட்டது. தற்போது கோவை கார் வெடிப்பில் பன்னாட்டு தொடர்புக்கான முகாந்திரம் இருப்பதால் என்ஐஏயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் இன்றி அண்ணாமலை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். பாஜக தலைவர் பதவிக்கு அண்ணாமலை தகுதியில்லை. பாஜகவில் இளைஞரணி பொறுப்புக்கு தான் அண்ணாமலைக்கு தகுதி உள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற இருந்த அசம்பாவிதம் போலீசாரால் தடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications