"ஆப்பசைத்து வாலை இழந்த குரங்கு".. ஆர்.என் ரவிக்கு தமிழிசை "திடீர்" வார்னிங்? பற்ற வைத்த முரசொலி!
சென்னை: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்து காட்டமான கட்டுரை ஒன்றை ஆளும் திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி வெளியிட்டு உள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில், "தமிழ்நாட்டில் நான் மூக்கை" நுழைப்பேன் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறி இருந்தார். தமிழ்நாடு அரசியல் குறித்து அவ்வப்போது தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்து வருகிறார்.
ஆளுநராக இருக்கும் அவர் நடுநிலையாக இல்லாமல், அரசியல் சார்புடன் செயல்படுவது கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இதை திமுகவினர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர் .
இந்த நிலையில்தான் தமிழகத்தில் நான் மூக்கை நுழைக்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் இப்போது சொல்கிறேன் தமிழகத்தில் மூக்கை மட்டுமல்ல தலையையும் கூட நுழைப்பேன்., அதை யாராலும் தடுக்க முடியாது, என்று தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்து உள்ளார்.

கட்டுரை
இதையடுத்து தற்போது தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்து காட்டமான கட்டுரை ஒன்றை ஆளும் திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி வெளியிட்டு உள்ளது. அதில், தமிழகத்தில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைப்பேன் என ஆளுநர் தமிழிசை பேசியுள்ளாரே; படித்தீர்களா? என்ற கேள்வியுடன் கட்டுரையை தொடங்கி உள்ளது. மேற்கொண்டு கட்டுரையில்,. தெலுங்கானாவில் அவரால் எதையும் நுழைக்க முடியாத ஆதங்கத்தில் தமிழகத்தில் நுழைப்பேன் என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்.

முரசொலி
ஒரு வேளை தெலுங்கானாவில் தேவையின்றி மூக்கையும், தலையையும், வாலையும் நுழைத்து பட்டிடும் பாட்டால் வெளி வந்த ஆதங்கப் பேச்சாகக் கூட இது இருக்கலாம். இது தமிழக ஆளுநருக்கு அம்மையார் மறைமுகமாகத் தந்த எச்சரிக்கையாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைத்து அம்மையார் சொன்ன செய்தியை, ஆளுநர் ரவி கவனமாகப் படித்திட வேண்டும்! (தெலுங்கானா ஆளுநராக) எனது பணிகள் இடையூறாக இருப்பதாக ஆட்சியாளர்கள் சில நேரங்களில் நினைத்து விடுகிறார்கள்!

தமிழிசை
குடியரசு தினத்தன்று தெலுங்கானா மாநிலத்தில் என்னை கொடியேற்ற விடவில்லை. ராஜ்பவன் வளாகத்தில் நான் கொடியேற்றிக் கொண்டேன். சில காரணங்களால் என்னை கவர்னர் உரையாற்றவும் விடவில்லை என்றெல்லாம் ஆளுநர் தமிழிசை பேசியுள்ளார்! தமிழ்நாட்டில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைத்து தெலுங்கானா ஆளுநர் பேசிய இந்தப் பேச்சு, தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கு, 'இது போன்ற நிலை உங்களுக்கும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.' என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக இருக்கலாம்.

ஆளுநர் ரவிக்கு
தமிழிசையின் பேச்சு ஆளுநருக்கு எச்சரிக்கை விடுத்திடும் பேச்சாக இருந்தால் வரவேற்கிறோம். ஒருவேளை வேறு அர்த்தத்தில் பேசியதாக அவர் கூறுவாரேயானால், அம்மையாருக்கு ஆப்பசைத்து வாலை இழந்த குரங்கின் கதை தெரிந்திருக்கும். அதனை நினைவுகூற வேண்டுகிறோம், என்று முரசொலி கட்டுரையில் விமர்சனம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் தரப்பிற்கும், ஆளுநருக்கும் இடையில் கடுமையான மோதல் உள்ள நிலையில்தான் இந்த கட்டுரை வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications