ஆதவ் அர்ஜுனாவிடம் சொல்லி அனுப்பியது இதுதான்.. ஆனால் அவர் கேட்கவில்லை.. திருமாவளவன்
சென்னை: ஆதவ் அர்ஜுனாவை சுதந்திரமாக அந்த விழாவில் பங்கேற்கலாம் என்று சொன்னேன். அதே வேளையில் அரசியல் எதுவும் பேச வேண்டாம். புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி பேசுங்கள் என்று சொல்லியிருந்தோம். ஆனால் அதை மீறி அவர் பேசியிருந்ததால் நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். இதில் திமுக எந்த வித அழுத்தமும் தரவில்லை. அவர்கள் இதை பற்றியே பேசவில்லை. இதேபோன்று விஜய்யின் தவெக மற்றும் விசிக இடையே மோதல் இல்லை என்று தொல் திருமாவளவன் கூறினார்.
விடுதலை சிறுத்தைக கட்சி தலைவர் தொல் திருமாவளவன் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். தொடர்ந்து வெளியே வந்த திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஆதவ் அர்ஜுனாவை இடைநீக்கம் செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

விசிகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமீப காலமாக சமூக வலைத்தளங்களில், கட்சியின் நன்மதிப்புக்கும், நன்பகத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவானது. இது குறித்து அவரிடம் தொடர்ச்சியாக அறிவுறுத்தல் கூறினோம். ஆனாலும் கூட அவரது சமீபத்திய மேடைப்பேச்சு, சமூக வலைத்தள பதிவு, கட்சியின் நன்மதிப்புக்கும் தலைமையின் நன்மதிப்புக்கும் எதிராக அமைந்த சூழ்நிலையில் தான் கட்சியின் தலைமை நிர்வாகத்தை சார்ந்தவர்களோடு கலந்து ஆலோசனை செய்து 6 மாத காலத்துக்கு இடைநீக்கம் செய்து முடிவு எடுத்து இருக்கோம். பலமுறை அவருக்கு அறிவுறுத்தல்கள் கொடுத்து இருந்தோம். ஆனால் அதை மீறி இப்படி பேசியிருந்ததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
திமுகவிடம் இருந்து எந்த ஒரு அழுத்தமும் நெருக்கடியும் எனக்கு கொடுக்கப்படவில்லை. அதைப்பற்றி அவர்கள் யாரும் பேசவில்லை. விஜய் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்று நான் எடுத்த முடிவு என்னுடைய முடிவு தான். விசிகவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த மோதலும் இல்லை. விஜய் அவர்களோடு, எந்த சர்ச்சையும், சிக்கலோ ஏற்பட்டது இல்லை.
ஆனால் அவர்களோடு நாங்கள் மேடையில் பங்கேற்ற போது, எங்கள் கொள்கை பகைவர்கள், எங்கள் வளர்ச்சியை விரும்பாதவர்கள், எங்களை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ட்ரோல் செய்ய நினைத்தவர்களுக்கு நாங்கள் வாய்ப்பளிக்க கூடாது என்று தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனை முன்பே சொல்லிவிட்டேன். தொடர்ந்து தான் ஆதவ் அர்ஜூனா பங்கேற்றார்.
நூல் வெளியீட்டு விழாவுக்கு முன்பு ஆதவ் அர்ஜுனா, என்னிடம் பேசினார். நூலை உருவாக்கியதில் உங்கள் பங்களிப்பு இருக்கிறது. எனவே இந்த நிகழ்ச்சியில் தவிர்க்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். அப்படி உங்களை கட்டுப்படுத்துவது ஜனநாயகம் இல்லை. ஆகவே சுதந்திரமாக நீங்கள் அந்த விழாவில் பங்கேற்கலாம் என்று சொன்னேன். எனக்கு எந்த நெருடலும் இல்லை என்று சொன்னேன். அதே வேளையில் அரசியல் எதுவும் பேச வேண்டாம். புரட்சியாளர் அம்பேத்கர் பற்றி பேசுங்கள். நூல் உருவாக்கத்தின் பின்னணி பற்றி பேச சொல்லியிருந்தேன். கட்சியின் முக்கிய பொறுப்பாளர் என்கிற வகையில் அவருக்கு சில வழிகாட்டுதல்களை கொடுத்தேன்.
அதையும் மீறி அவர் பேசிய பேச்சு பல்வேறு சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. விசிகவின் மீதான நம்பகத்தன்மையை நொறுக்கும் வகையில் இந்த பேச்சு அமைந்துவிட்டது. ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தேவை இருந்ததால் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி தோழர்களுடன் கலந்து பேசி முழுமையாக அனைவரின் ஒப்புதலோடு, கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கோம். இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலைக்கு பதில்: தொடர்ந்து விசிக கட்சி திருமாவளவன் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லை ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று நேற்று அண்ணாமலை பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து திருமாவளவன் கூறியதாவது:- பாஜக அதானி கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லை மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதற்கு பதில் சொல்லட்டும் அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன். 6 மாத இடைநீக்கத்துக்கு பிறகு ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், ”அதற்கு இன்னும் 6 மாதம் இருக்கிறது. அதன் பிறகு பதில் கூறுகிறேன்” என்று பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications