அண்ணாமலை கண்ட இடத்தில் தூக்கி வைக்க பெரியார் சிலை ஆட்டுக்குட்டி அல்ல- 'குலசாமி': திமுக ராஜீவ் காந்தி
சென்னை: தந்தை பெரியார் சிலையை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்ட இடத்தில் தூக்கி வைக்க பெரியார் சிலை ஒன்றும் அவர் வீட்டு ஆட்டு குட்டி அல்ல.. எங்கள் குலசாமி என திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
ஶ்ரீரங்கத்தில் பாதயாத்திரையின் போது பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிகு வந்த முதல் நொடியிலேயே ஶ்ரீரங்கம் கோவில் முன்பாக உள்ள பெரியார் சிலை அகற்றப்படும் என்றார். இதற்கு திமுக, இடதுசாரித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையப் போவது இல்லை; அதனால் இதைப் பற்றி எந்த கவலையும் இல்லை எனவும் கூறியிருந்தனர்.

அண்ணாமலை விளக்கம்: பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, 2026-ல் நீங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாய்ப்பு கொடுத்து ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் போது அந்த வாசகங்கள் அங்கே இருக்காது என்கிறோம். அப்ப பெரியார் சிலையை என்ன செய்வீர்கள் என திமுக தலைவர்கள் கேட்கிறார்கள். பெரியார் அவர்களைப் பொறுத்தவரை பெரியார் சிலை எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருக்க வேண்டும். ஒரு பொது இடத்தில், எல்லா தலைவர்களும் எங்கே இருக்கிறார்களோ எல்லா தலைவர்களுக்கும் கொடுக்கக் கூடிய கவுரவம் எல்லா தலைவர்களுக்கும் இருக்கும். பொது இடத்தில் அந்த சிலைகள் இருக்கும். எந்த சிலையையும் யாரும் சேதப்படுத்துவது கிடையாது. அந்த சிலைக்கு என்ன மரியாதை கொடுக்கனுமோ அந்த மரியாதை பாரதிய ஜனதா கட்சி கொடுக்கும் என கூறியிருந்தார்.

ராஜீவ் காந்தி கண்டனம்: அண்ணாமலையின் இந்த கருத்துக்கு திமுக மாணவர் அணித் தலைவர் ராஜீவ் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜீவ் காந்தி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அண்ணாமலை கண்ட இடத்தில் தூக்கி வைக்க பெரியார் சிலை ஒன்றும் அவர் வீட்டின் ஆட்டுக்குட்டி அல்ல...! ஆண்டவன் பெயரில் தமிழர்களின் உரிமைகளை சுரண்டிய கும்பலின் அடிமடியில் கை வைத்து தமிழர்களின் உரிமை காத்த 'எங்களின் குலசாமி' தந்தை பெரியார்!! இவ்வாறு ராஜீவ் காந்தி பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications