ஆணவ பேச்சு.. உங்களால் மக்களை சந்தித்து வெல்லவே முடியாது.. நிர்மலா சீதாராமனுக்கு ராஜீவ் காந்தி பதிலடி
சென்னை: சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு சர்ச்சையைக் கிளப்பி இருந்த நிலையில், அதற்கு திமுகவின் ராஜீவ் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
யூடியூப் சேனல் சாணக்கியா டிவியின் 5ஆம் ஆண்டு விழாவில் நேற்று சென்னையில் நடந்தது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதில் கலந்து கொண்டார்.

அதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியா கூட்டணியைக் கடுமையாக விமர்சித்து இருந்தார். குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடியிருந்தார். இதற்கிடையே இதற்கு திமுகவின் ராஜீவ் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி: இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மக்களிடன் வாக்கு கேட்டு தேர்தலில் நின்று வெல்ல முடியாதவர்கள்தான் மக்களின் உரிமைகளை பிச்சை என்பார்கள்! நிர்மலா சீதாராமன் உங்களின் ஆணவ திமிர் கொண்ட இந்த பேச்சு மிகவும் அருவருப்பனா ஒன்று!! உங்களால் ஒரு போது மக்களிடம் நேரடியாக சென்று வாக்கு வாங்கி வெல்லவே முடியாது.. திருமதி நிர்மலா அவர்களே!" என்று அவர் சாடியுள்ளார். ராஜீவ் காந்தியின் இந்த பதிவு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பேச்சு: மேலும், ராஜீவ் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சின் ஒரு பகுதியைப் பகிர்ந்து இருந்தார். அதில் அவர், "எப்போதும் மற்ற கட்சி போடும் பிச்சையில் வாழக் கூடாது. இங்கே சில அரசியல் கட்சிகள் மக்களை எப்படிக் கையாள்கிறார்கள் எனப் பாருங்கள்.. வெள்ளமா இந்த 1000 ரூபாய்.. வீட்டில் எதாவது பிரச்சினையா இந்த 500 ரூபாய் என்கிறார்கள். இதுபோன்ற அரசியல் கட்சிகள் இருந்தால் நிச்சயம் நமது நாடு முன்னேறாது.
தொலை நோக்கு பார்வை, துணிச்சல் இருக்க வேண்டும். நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும்" என்று சொல்வது உடன் வீடியோ முடிகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து தான் ராஜீவ் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் பலரும் கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
திமுக மீது தாக்கு: முன்னதாக சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், "பிரியாணி பொட்டலத்திற்கும் பணத்திற்கும் வாக்களித்தால் எந்தவொரு நாடும் வல்லரசு இல்லை.. புல்லரசு கூட ஆக முடியாது.. ஒரு ஊழல் கூட இல்லாமல் 10 ஆண்டு பாஜக ஆட்சி நடந்துள்ளது. அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் தினமும் ஒரு ஊழல் நடந்து கொண்டு இருந்தது.
இப்போது இருக்கும் எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம் மோடியைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது தான். மோடியை ஏன் நீக்க வேண்டும். அவர் என்ன செய்தார். ஊழல் செய்தாரா.. நமது நாட்டு மக்களுக்கு தானே நல்லது செய்தார். டெங்கு, மலேரியாவைப் போல ஒரு மதத்தை அழிக்க வேண்டும் என்கிறார்கள். இப்படி பேசலாமா.. செக்குலர் எனச் சொல்பவர்கள் தான் இப்படிப் பேசுகிறார்கள். ஒரு மதத்தை அழிப்பேன் என்பவர்களுக்கு வாக்களிக்கலாமா" என்று அவர் கடுமையாகச் சாடி பேசினார்.












Click it and Unblock the Notifications