சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி எங்கே போனது? கூவத்தூருக்கா! எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்எஸ் பாரதி பதில்
சென்னை: சாத்தான் வேதம் ஓதுவது போல, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் எடப்பாடி பழனிசாமி பேசி இருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ் - பென்னிக்ஸ் இருவருமே உடல்நலக் குறைவால் இறந்தார்கள் என்று அலட்சியமாக கூறியவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறிய அவர், அப்போது நீதி எங்கே போனது என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கொடூரமான தாக்குதல் காரணமாக திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து திருப்புவனத்தில் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
அப்போது அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் அதிமுக எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறினார். அதில், துரதிருஷ்டவசமாக சில மனித மிருகங்கள் வந்து கடுமையாக தாக்கியதால், உங்களுடைய மகன் அஜித்குமார் மரணமடைந்துவிட்டார். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுக துணை நிற்கும். நாங்களும் உங்களுக்குத் துணை நிற்போம்.
அதிமுக துணை நிற்கும்
இது மீள முடியாத துயரம். ஒரு தாய் தனது மகனை இழப்பது என்பது கொடுமையான விஷயம். பெற்ற தாய்க்குத்தான் அந்த வலி தெரியும். உங்களுக்கு நான் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அது ஈடாகாது. நீங்கள் மனம் தளராமல் இருங்கள். நாங்கள் துணையாக இருப்போம். நீதிமன்றத்திலும் அதிமுக சார்பில் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். நீதிமன்றத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்படும். உங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
ஆர்எஸ் பாரதி பதிலடி
எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் பேசிய காணொளியும் வெளியாகியது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். அதில், சாத்தான் வேதம் ஓதுவது போல, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம், 'உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, அதிமுக துணை நிற்கும் என எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார்.
தமிழக அரசு நடவடிக்கை
"திருப்புவனம் கொடூரம் பற்றிய தகவல் வந்ததுமே, குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்; விரைந்து கைதும் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதோடு, இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.
2 நாட்களில் நடவடிக்கை
வழக்கும் உடனடியாக சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கியதோடு மட்டுமின்றி அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இரண்டே நாட்களில் சட்ட ரீதியான இத்தனை நடவடிக்கைகள் எடுப்பதும் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நிகழாதவை.
நினைவிருக்கிறதா?
இன்று அதை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் முதலமைச்சர். உங்கள் இருண்டகால ஆட்சியில் நடைபெற்ற, சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ் - பென்னீக்ஸ் இருவருமே உடல்நலக் குறைவால் இறந்தார்கள் என்றும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனவும் ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் பேசியவர் தானே நீங்கள்?
நீதி எங்கே போனது
அப்போது நீதி எங்கே போனது? கூவத்தூருக்கா? கொஞ்சமேனும் உங்களுக்கு மனசாட்சி இல்லையா? உங்களின் கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்பமாட்டார்கள்; இனியாவது நிறுத்திக் கொள்ளலாம்; நீதியை நிலைநாட்ட முதலமைச்சர் இருக்கிறார்! என்று பதிலடி கொடுத்துள்ளார். இதனை திமுகவினர் பகிர்ந்து அதிமுகவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications