மற்றதை விடுங்க.. பாஜக தேர்தல் வாக்குறுதியில் இந்த ஒரு பாயிண்ட்.. பாய்ந்து வந்த திமுக!
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை திமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஜனநாயகத் திருவிழா நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வரும் நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு உருவாக்கிய இந்த தேர்தல் அறிக்கை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது.
பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள்: ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும். நாடு முழுவதும் பொது வாக்காளர் பட்டியல் நடைமுறைப்படுத்தப்படும். நாடு முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் நிரந்தர அடையாள எண், அடையாள அட்டை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிக்ள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதுமே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் வாக்குறுதியை திமுக காட்டமாக விமர்சித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தி தொடர்பு தலைவரும், முன்னாள் எம்.பியுமான டிகேஎஸ் இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
திமுக கடும் எதிர்ப்பு: அப்போது பேசிய டிகேஎஸ் இளங்கோவன், "பாஜகவின் தேர்தல் அறிக்கை சற்று முன்பு தான் வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகளில் இதுவரை எதை பாஜகவினர் செய்திருக்கிறார்கள் என்ற கேள்வி தான் மக்கள் மத்தியில் எழுகிறது.
பாஜக இதுபோல பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறார்கள். ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா என்பது, 10 ஆண்டுகளாக மோடி ஆட்சியை பார்த்தவர்களுக்கு தெரியும். 15 லட்சம் தருவோம் என்பது தொடங்கி, 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்பது வரை எந்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.
மற்றதை பற்றி கவலை இல்லை: அதனால் மற்ற வாக்குறுதிகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் அவற்றை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் என ஜனநாயகத்தின் அடித்தளத்தைத் தகர்க்கிற முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பெருமையைச் சிதைக்கும் முயற்சி.
ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மாநிலங்களுக்கு என்று தனியாக உரிமைகள் இருக்கின்றன. மாநிலங்களுக்கு என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தனியாக அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.
ஜனநாயகத்துக்கே எதிரானது: இந்தியா என்பது பல மொழி பேசுகிற, பல இன மக்கள் வாழ்கிற, பல சித்தாந்தங்களை கொண்ட ஒரு நாடு. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாடு, இதுவரை பாஜகவை ஏற்றுக்கொண்டதில்லை. திராவிடக் கட்சிகள் ஆளும் மாநிலம் தமிழ்நாடு.
இந்த தேர்தலுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணம் சொல்லி தமிழ்நாட்டில் ஆட்சியை கலைத்து விட்டார்கள் என்றால் அடுத்த தேர்தல் வரை தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவே மத்திய அரசு செயல்படும். காஷ்மீரில் ஆளுநர் மூலமாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு நாடு ஒரு தேர்தல் என்பது தங்களை ஏற்காத மாநிலங்களில் கூட தங்களுடைய கொள்கைகளை அழுத்தம் கொடுத்து பின்பற்ற வைக்கக்கூடிய ஒரு செயல். இது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது, மக்களுக்கும் எதிரானது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications