ஆளுநர் அர்லேகரை சந்தித்த திமுக புள்ளிகள்.. தவெக அரசுக்கு எதிரான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுடன் ஃபைல்
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து திமுக பிரதிநிதிகள் புகார் கடிதம் அளித்துள்ளனர். அமைச்சரவை கூட்டத்தில் தனி நபர்கள் பங்கேற்றது, குதிரை பேரம், திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மிரட்டப்பட்டது தொடர்பாக ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சந்தித்தனர். தவெக வெளிப்படையாக குதிரை பேரம் நடத்துவதாக ஆளுநரிடம் திமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

மேலும், திமுக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் மிரட்டியதாகவும் ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது. குதிரை பேரம், அனிதா ராதாகிருஷ்ணனை மிரட்டிய விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரைச் சந்தித்து விளக்கினோம். ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இரண்டு பேர் அமைச்சர்களைவிட அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அரசின் எல்லாக் கூட்டங்களிலும் பங்கேற்று அதிகாரிகளுக்கு உத்தரவு போடுகிறார்கள். இப்படி ஒரு கேவலமான சூழ்நிலை இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநரிடம் தெரிவித்தோம். அவர் அதை கூர்மையாக கவனித்தார்.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இருவர் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பது தவறு என்பதை ஆளுநரே ஒப்புக்கொள்கிறார். 'அப்படியென்றால் அவர்களை அமைச்சராக்கி, அமைச்சரவையில் பங்கேற்க வைக்க வேண்டியதுதானே?' என ஆளுநரே சிரித்துக் கொண்டே சொன்னார். இது தவறு என ஆளுநரே மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்.
கடந்த கால ஆட்சியில் அவதூறு வழக்குகளுக்கு எல்லாம் யாரையும் கைது செய்தது கிடையாது. அதையும் மீறி அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்திருக்கிறார்கள். அவர் 7 முறை எம்எல்ஏவாக இருந்தவர். 2 முறை அமைச்சராக இருந்தவர். அவரை 5 மணி நேரம் துன்புறுத்தியுள்ளனர். அத்துடன், தவெகவில் இணைய வற்புறுத்தியுள்ளனர்.
தவெகவில் இணைந்தால், நீங்கள் கேட்கும் அமைச்சரவையை தருவதாக திமுகவின் அமைப்பு துணை செயலாளரான ஆஸ்டினிடம் தவெகவினர் கூறியுள்ளனர். ராஜினாமா செய்துவிடுங்கள், விஜய் உங்களை பிரச்சாரம் செய்து வெற்றி பெறச் செய்வார் என வற்புறுத்தியுள்ளனர்.
வேப்பனஹள்ளி தொகுதி திமுக எம்எல்ஏ சீனிவாசனுக்கு ரூ.50 கோடி கொடுப்பதாக பேரம் பேசினர். 'நீங்கள் இளைஞர். தவெகவுக்கு வாருங்கள். திமுகவை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடலாம்' என தெரிவித்துள்ளனர். ஆள் பிடிக்கவே இந்த ஆட்சி நடக்கிறது. ஆக்கபூர்வமான பணிகளை செய்யவில்லை. இது குறித்து ஆளுநரிடம் கூறியுள்ளோம். அவர் தக்க நடவடிக்கை எடுப்பார்" எனத் தெரிவித்துள்ளர்.
திமுக தரப்பில் ஆளுநரிடம் மனு அளிப்பதற்கு முன்பாக அதிமுகவும் குதிரை பேர புகார் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து இன்று புகார் அளித்தது. முன்னதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் ஆளுநர் அர்லேகரை சந்தித்து புகார் அளித்திருந்தனர். தவெக அரசுக்கு எதிராக இன்று ஒரே நாளில் திமுக, அதிமுக, பாஜக என எதிர்க்கட்சிகள் வரிசையாக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
