கேசிஆர் ரூட்டை பிடித்த ஸ்டாலின்! ஆளுநர் ரவிக்கு திமுக பிரஷர்.. தமிழிசைக்கு நேர்ந்த அதே "சம்பவம்"!
சென்னை: தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது போலவே தமிழ்நாட்டிலும் ஆளுநருக்கும் ஆளும் தரப்பிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜனுக்கும் முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. தெலுங்கானா மேலவைக்கு கவுசிக் ரெட்டி என்ற எம்எல்ஏவை ஆளும் டிஆர்எஸ் கட்சி பரிந்துரை செய்தது.
இதை தமிழிசை ஏற்றுக்கொள்ளாததும் இந்த மோதலுக்கு காரணம். இதன்பின் பல்வேறு அரசு விழாக்களில் தமிழிசை புறக்கணிக்கப்பட்டார்.

புறக்கணிப்பு
தமிழிசையை அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் கேசிஆர் தொடர்ந்து புறக்கணித்தார். இதை பற்றி தமிழிசை புகார் அளித்தும் கேசிஆர் கண்டுகொள்வதாக இல்லை. அங்கு ஆளுநர் உரை இல்லாமலே பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் நடைபெற்றது. பின்னர் நடந்த பல்வேறு கூட்டங்களில் தமிழிசை புறக்கணிக்கப்பட்டார்.முழுகு மாவட்டத்தில் நடந்த சமக்கா சரலக்கா விழாவில் தமிழிசை கலந்து கொள்ள சென்றார். அப்போது அவரை அழைக்க அரசு,அதிகாரிகள், போலீஸ் தரப்பில் இருந்து யாரும் செல்லவில்லை.

செல்லவில்லை
அதோடு தமிழிசை தெலுங்கானாவில் செல்ல போக்குவரத்து வசதியும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. அதோடு ஆளுநர் தனது மாளிகையில் விருந்து ஒன்றை உகாதியை முன்னிட்டு கொடுத்தார். இந்த உகாதி விருந்தை மொத்தமாக ஆளும் கட்சி புறக்கணித்தது. ஆளுநரை சந்திக்க முடியாது என்று கூறி ஆளும் தரப்பு இந்த விருந்தை புறக்கணித்தது. இதை பற்றித்தான் டெல்லியில் பிரதமர் மோடியிடம் ஆளுநர் தமிழிசை நேரடியாக புகார் வைத்தார்.

தமிழ்நாடு
தற்போது தமிழ்நாட்டில் இதே ரூட்டை திமுக பிடித்துள்ளது. ஆளுனருடன் நீட் விவகாரத்தில் திமுகவிற்கு மோதல் இருக்கிறது. நீட் தேர்வு விவகாரத்தால் ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என்று திமுக சார்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதேபோல் ஆளுநரை கட்டுப்படுத்தும் மசோதா ஒன்றும் திமுக எம்பி வில்சன் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மோதல் இருந்தாலும் தமிழக அரசு ஆளுநரை எங்கும் புறக்கணிக்கவில்லை.

முதல்வர் ஸ்டாலின்
ஏன் முதல்வர் ஸ்டாலினும் டெல்லிக்கு சென்று பேசிய போது.. ஆளுனருடன் நீட் விவகாரத்தில் மோதல் இருந்தாலும் உறவு சுமுகமாகவே இருப்பதாக கூறினார். ஆனால் இந்த நிலையில்தான் முதல்முறையாக கேசிஆர் ரூட்டை பிடித்து அவரை போலவே தமிழ்நாடு அரசும் புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதன்படி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது தமிழ்நாடு அரசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உகாதி
தமிழ்நாடு மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க போவதில்லை என்று ஆளுநருடனான சந்திப்பு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார். தெலுங்கானாவில் உகாதியின் போது தமிழிசைக்கு நேர்ந்த அதே சம்பவம் இங்கு தமிழ்நாட்டில் ஆர். என் ரவிக்கு தற்போது நேர்ந்துள்ளது. ஆனால் ஒரே விஷயம் அங்கு தமிழிசைக்கு போதிய அளவில் மரியாதையை தரப்படவில்லை. விருந்துக்கு வரவில்லை என்று யாரும் தமிழிசையிடம் மரியாதைக்கு கூட தெரிவிக்கவில்லை.

தமிழ்நாடு
ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை. அழைப்பு விடுத்தவர் என்ற மரியாதைக்காக ஆளுநரை நேரில் பார்த்து நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டோம் என்று திமுக தெரிவித்துள்ளது. நீட் விவகாரத்தில் ஆளுநர் ரவிக்கு பிரஷர் கொடுக்கும் வகையில் திமுக இந்த முடிவை எடுத்துள்ளது. இது ஆளுநர் ரவி - தமிழ்நாடு அரசு இடையிலான உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியும் இந்த நிகழ்வை புறக்கணிப்பதால் அதிமுக, பாஜக மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications