பாஜக டபுள் இன்ஜின்.. திமுக ட்ரபிள் இன்ஜின்! ஸ்டாலின் மோடியை விமர்சிப்பது வியப்பு! தமிழிசை காட்டம்
சென்னை: தமிழகம் மீண்டு வர வேண்டும் என்றால் திமுக மீண்டும் வரக் கூடாது. நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டிய காலகட்டம் இது.. மக்கள் காப்பாற்றப்பட வேண்டும், இயற்கை வளம் காப்பாற்றப்பட வேண்டும் எனவும், திமுக ட்ரபிள் இன்ஜின் அரசை வைத்து கொண்டு, நாடு முழுவதும் டபுள் இன்ஜின் ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி வரும் பிரதமர் மோடியை விமர்சிப்பது வியப்பாக உள்ளது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," பாஜகவின் தேர்தல் அறிக்கை, மிகச்சிறந்த மக்களுக்கான தேர்தல் அறிக்கையாக இருக்கும்.
எந்த அரசியல் கட்சியும் கொடுக்காத அளவிற்கு தேர்தல் அறிக்கையாக இருக்கவும். பாரத ,பிரதமர் சொல் கூறிவிட்டுச் சென்ற நடைமுறைப்படுத்தும் தேர்தல் அறிக்கையாக இருக்கும். டபுள் இன்ஜின் டப்பா என்ஜின் வைத்து என்ன செய்வீர்கள்? என தமிழக முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

தமிழிசை சௌந்தர்ராஜன்
முதல்-அமைச்சர் அவர்களே, நீங்கள் ட்ரபிள் இன்ஜின் அரசு வைத்து கொண்டு, நாடு முழுவதும் டபுள் இன்ஜின் ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி வரும் பிரதமர் மோடியை விமர்சிப்பது வியப்பாக உள்ளது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாநில அளவிலும், மாநகராட்சி அளவிலும் பாஜக தொடர் வெற்றிகளை குவித்து, ட்ரிபிள் இன்ஜின் ஆட்சியாக அந்த மாநிலங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
திமுக ட்ரபிள் இன்ஜின்
பஞ்சாயத்து தேர்தலையே நடத்தத் தயங்கும் நிலையில் தமிழ்நாட்டில் ட்ரபிள் இன்ஜின் அரசு போதை, கடன், பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டுள்ளது. நல்ல டபுள் இன்ஜின் ஆட்சி' கொண்டு வர முயற்சிக்கும் போது அதை டப்பா இன்ஜின் என விமர்சிப்பது சரியா? உண்மையில் நீங்கள் தான் தப்பான இன்ஜினை' வைத்து தமிழகத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள். பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்தவுடனே முதல்வருக்கு ஏற்படும் பதற்றம், அவருடைய ட்வீட்டிலேயே தெளிவாக வெளிப்படுகிறது.
பாஜக டபுள் இன்ஜின்
அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள், சத்துணவு பணியாளர்கள் என அனைவரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிக்கிறது என்று முதல்-அமைச்சர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் நேற்று பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு கொடுத்த நிதி மற்றும் நிறைவேற்றிய திட்டங்களை எடுத்துரைத்தார். மத்திய அரசின் உதவியே இல்லாமல் நாங்கள் போய்க் கொண்டிருக்கிறோம், உழைத்துக் கொண்டிருக்கிறோம் என்று முதல்-அமைச்சர் சொல்கிறார். உழைப்பதற்காகத் தானே மக்கள் உங்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளே உழைக்கும்போது ஆளுங்கட்சி உழைத்து தானே ஆக வேண்டும்.
ஸ்டாலின் மீது விமர்சனம்
சமூக நீதி பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இன்று வரை வேங்கைவயலுக்கு தீர்வு கிடைக்கவில்லை. சட்டம் ஒழுங்கு பற்றி செல்வப்பெருந்தகை கேட்கமாட்டார், நான் கேட்கிறேன். நெல்லையில் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. குற்றவாளியை ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை? பெண்களுக்கு உதவித் தொகை கொடுக்கிறீர்கள். மறுபுறம் டாஸ்மாக் வருமானம் 49 ஆயிரம் கோடியைத் தாண்டி போய்க் கொண்டிருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி
எங்கிருந்து அந்த பணம் வருகிறது? அக்காவிடம் பணத்தைக் கொடுத்து, அண்ணனிடம் இருந்து டாஸ்மாக்கில் வாங்கிக் கொள்கிறீர்கள். தனிநபர் மீது இருக்கும் கடன் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். தமிழகம் மீண்டு வர வேண்டும் என்றால் திமுக மீண்டும் வரக் கூடாது. நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டிய காலகட்டம் இது. மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். இயற்கை வளம் காப்பாற்றப்பட வேண்டும்." என்றார்.












Click it and Unblock the Notifications