கார் சாவிதானே காணோம்.. இதுக்கா சவுந்தர்யா ரஜினி புகார் கொடுத்தார்? சாவிக்கு பின்னால் என்ன இருக்கு?
சென்னை: இயக்குநரும் ரஜினிகாந்தின் இளைய மகளுமான சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது சொகுசு காரின் சாவி தொலைந்துவிட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
கார்தான் இருக்கிறதே, கார் சாவி தொலைந்தால் என்ன, கொஞ்ச நாட்களில் திரும்ப கிடைத்துவிடும். இதற்கெல்லாமா புகார் கொடுப்பார்கள் என நீங்கள் இந்த விஷயத்தை சாதாரணமாக நினைத்தால் அது தவறு.
கடந்த 10 ஆம் தேதி ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சொகுசு காரின் சாவி தொலைந்துவிட்டதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஏப்ரல் 23 ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டை சென்றுக் கொண்டிருந்த போது கல்லூரி அருகே எனது காரின் மற்றொரு சாவி காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அவர் ஏன் கொடுத்தார் என்பது குறித்து ரஜினி ரசிகர் மனோ என்பவர் தனது ட்விட்டரில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஸ்மார்ட் கார் சாவியை தொலைத்துவிட்டால் நீங்கள் எத்தனை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு!
சொகுசு மற்றும் ஸ்போர்ட் கார்களின் சாவி தொலைந்துவிட்டால் அதற்கு பதிலாக வேறு சாவி வாங்குவதற்கு அதிகம் செலவிட வேண்டும். அப்படியே செலவிட்டாலும் அந்த சாவி நம்மிடம் கிடைக்க சில நாட்களோ சில மாதங்களோ ஆகலாம். எல்லாவற்றுக்கு மேல் பாதுகாப்பு பிரச்சினைகளும் இருக்கிறது.
உங்கள் காரின் ஸ்மார்ட் சாவியானது குறைந்தபட்சம் 100 அடி தூரத்தில் இருந்து கூட இயக்கக் கூடியவை. இந்த சாவியை நீங்கள் தொலைத்துவிட்டாலோ அல்லது யாராவது திருடிக் கொண்டு சென்றாலோ அந்த சாவியை வைத்து அவர்கள் தவறாக பயன்படுத்தி ஏதாவது செய்தாலோ அதற்கு முழு பொறுப்பு அந்த காரின உரிமையாளர் ஏற்க வேண்டும்.
முகமறியாத நபர்கள் கூட அந்த சாவியை வைத்துக் கொண்டு உங்கள் காரை தூரத்தில் இருந்து இயக்கலாம். நீங்கள் நகைகள், பணம், அல்லது முக்கிய ஆவணங்களை அந்த காரில் வைத்து எடுத்துச் சென்றால் அவை அந்த தொலைந்து போன சாவியை கொண்டு இயக்கி எளிதாக திருடிவிடலாம். இது திரும்ப திரும்ப நடந்து கொண்டே இருக்கும். அந்த சாவி மர்மநபர்களிடம் இருக்கும் வரை முடிவே இல்லை.

ஒரு வேளை நீங்கள் உங்கள் காரில் கேமராவை வைத்திருந்தாலோ அல்லது ஜிபிஎஸ் டிராக்கரை வைத்திருந்தாலோ நீங்கள் உங்கள் காரை எங்கு நிறுத்தியிருந்தாலும் அதை மற்றவர்கள் இயக்குகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியவே தெரியாது. அந்த காரை சட்டவிரோதம் மற்றும் குற்றச் செயல்களை செய்வதற்கு பயன்படுத்த திருடி செல்லவும் வாய்ப்பிருக்கிறது.
எனவே ஸ்மார்ட் கார் சாவி தொலைந்தால் உடனே போலீஸில் புகார் அளிக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் காரில் சமூகவிரோத செயல்கள் நடந்தாலும் உரிமையாளருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்பதை போலீஸார் உணர்ந்து உங்களுக்கு உதவுவார்கள். இந்த சாவியானது ஏதோ திண்டுக்கல் பூட்டு அல்ல மாற்றுவதற்கு! ஏற்கெனவே இருக்கும் ஒரு சாவியில் ரீபுரோகிராமிங் செய்துதான் சாவியை மாற்ற வேண்டும். ஆனால் அது மிகவும் விலை அதிகமானது மற்றும் கைக்கு சாவி கிடைக்க அதிக நாட்களாகும். எதுவாக இருந்தாலும் சாவி தொலைந்தவுடன் போலீஸில் புகார் கொடுத்துவிட்டு பிறகு சாவியை மீட்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என மனோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications