தமிழ்நாட்டுக்கு புதுசா ஒரு கட்சி தேவையா? விஜய் கட்சியில் சேர விருப்பமா? விஷால் வில்லங்க பதில்
சென்னை: நடிகர் விஜய் கட்சியுடன் இணைந்து செயல்படும் விருப்பம் உள்ளதா? நடிகைகள் பாலியல் புகார் தொடர்பாக நடிகர் சங்கம் முறையாக நடவடிக்கை எடுத்திருக்கிறதா? இனிமே எடுக்கச் சிறப்பான செயல் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளதா? ஆகிய கேள்விக்கு நடிகர் விஷால் வெளிப்படையாகப் பதிலளித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் கட்சி ஆரம்பித்தார். கடந்த மாதம் 22 ஆம் தேதி கொடியை அறிமுகம் செய்தார். இந்த மாதம் மாநாடு என அறிவித்துள்ளார். தேதி இன்னும் உறுதியாகவில்லை. விஜய் அரசியல் பிரவேசம் செய்வதற்கு முன்பே அரசியல் களத்தில் இறங்கியவர் விஷால். கடந்த 2017இல் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது ஆவணங்கள் முறையாக இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இப்போது விஜய் கட்சியுடன் களத்தில் 2026இல் இருப்பாரா? அவரது கட்சியில் இணைவாரா? நடிகர் சங்கம் பாலியல் புகார்கள் பற்றிப் பரபரப்பான விவகாரத்தை எப்படி பார்க்கிறது? எனப் பல கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். கூடவே ஸ்ரீரெட்டி விவகாரம், அமலாபால் விவகாரம் எனப் பலவற்றைப் பேசி இருக்கிறார். ஒரு பத்திரிகைக்கு விஷால் பேசுகையில், "இந்தப் பாலியல் புகார்களை நான் இரண்டுவிதமாகப் புரிந்துகொள்கிறேன். ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் உடனடியாக புகார் கொடுக்கவேண்டும். அப்படி கொடுத்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். இப்படித்தான் ஒரு முறை அமலாபால் எனக்கு போன் செய்தார். அவர் ஏதோ மலேசியா நிகழ்ச்சிக்காக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்த போது ஈவெண்ட் மேனேஜர் வந்திருக்கிறார். அவர், 'ஷோ முடிந்த பிறகு டின்னரில் பங்கேற்க வேண்டும்' என்று ஏதோ ஒரு தவறாகப் பேச ஆரம்பித்திருக்கிறார். அதைக் கேட்டுக் கடுப்பான அமலாபால் அவரைப் போட்டு அடித்திருக்கிறார்.
அவரைப் பிடித்து வைத்துக் கொண்டுதான் எனக்கு போன் செய்தார். உடனே நான் கார்த்திக்கு போன் செய்து வர சொன்னேன். தி நகர் போலீசுக்கு போன் போட்டு அவர்களையும் வர சொன்னோம். உடனே அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இதுதான் சரியான அணுகுமுறை. அதைவிட்டுவிட்டுப் பல வருடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, பின்னால் பேசி என்ன நடக்கப் போகிறது? பிரச்சினையை எதிர்கொள்ளும்போதே தைரியமாக அதை வெளியே சொல்லவேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்யவேண்டும்.
அதற்காகத்தான் நாங்கள் ஒரு குழுவை உண்டாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். அதில் ரோகிணி போன்ற சீனியர் நடிகையை அமர்த்தலாம் என விரும்புகிறோம். 'மீ டூ' என ஒரு இயக்கம் வந்தபோது பலரும் பலரது பெயரை வெளியிட்டு வந்தார்கள். இவர் அப்படி? அவர் இப்படி என்று சொன்னார்கள். அந்தப் புகாரில் கார்த்தி, என் பெயர் இல்லை. ஆனால், ஸ்ரீரெட்டி என்பவர் பைத்தியம் போல புகார் எழுப்பினார். அதன்பின்னர் ஒரு பத்திரிகையில் மன்னிப்பு கேட்டார். ஒருவர் புகழ்பெற்று இருக்கிறார் என்பதற்காக ஆதாரமே இல்லாமல் ஒரு குற்றச்சாட்டைச் சிலர் முன்வைப்பதையும் பார்க்கிறோம். அது தவறு.
ஒரு பெண் புகார் சொல்லிவிட்ட பிறகு ஆண் அதற்கு ஒரு மறுப்பு சொன்னால் சமூகத்தில் யாரும் நம்புவதில்லை. அப்படியும் ஒரு விசயம் நடக்கிறது. சினிமா உலகில் நிறைய உப்புமா கம்பெனிகளும் இருக்கின்றன. இதை ஒரு வேலையாக செய்கிறார்கள். அதை எப்படி தடுக்க முடியும்? அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போதுதான் அது தடுக்கப்படும். அதை ஏன் செய்ய மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை" என்று பேசியவர் விஜய் அரசியல் கட்சி பற்றியும் தனது அரசியல் எண்ட்ரி பற்றியும் பேசி இருக்கிறார்.

தொடர்ந்து விஷால், "விஜய் கட்சி ஆரம்பித்ததை வரவேற்கிறேன். அவர் கட்சியில் உடனே நான் சேரப்போகிறேனா என கேட்கவேண்டாம். எனக்கு அது பற்றி எந்தவித ஐடியாவும் இல்லை. எனக்குத் தோன்றும்போது தான் ஒரு விசயம் பற்றி முடிவு எடுப்பேன். முன்கூட்டியே ஒன்றைப் பற்றி யோசிக்கமாட்டேன். விஜய் அழைத்தால் என்ன செய்வது என்று இப்போதே நினைக்கக் கூடாது. அவர் அழைத்த பிறகுதான் அதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
ஆனால் 2026இல் நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டேன். நான் வருவேன். வராமல் தடுக்கவேண்டியது உங்கள் வேலை. சமூக சேவை செய்வதற்கு இவ்வளவு அரசியல் கட்சிகள் தேவையா? தமிழ்நாட்டுக்கு இன்னொரு அரசியல்வாதியாக நான் வருவதற்கான தேவை என்ன இருக்கிறது? இன்றைக்குக் கூட பல கிராமங்களில் குடிநீர் வசதிகூட இல்லாமல் இருக்கிறது. இது கேவலம் இல்லையா? நானே விளாத்திகுளம் பகுதியில் பம்பு போட்டுக் கொடுத்தேன். 235 குடும்பங்கள் தினம் 8 கிமீட்டர் நடந்து போய் குடிநீர் எடுத்து வருகிறார்கள். அது தப்பாகப்பட்டது. நான் செய்தேன். உடனே பப்ளிசிட்டி என்றார்கள். எனக்குப் பெயர் தேவையில்லை. அந்த மக்களுக்கு தண்ணீர் குடித்தால் போதும் என்று நான் நினைத்தேன்" என்கிறார்.












Click it and Unblock the Notifications