17 ஆண்டுகளுக்கு பின்..சென்னைக்கு வரும் டபுள் டக்கர் பஸ்.. எப்போது முதல் இயக்கப்படும்?
சென்னை: 17 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. 20 புதிய மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் வாங்கப்பட்டு, இரு மாதங்களுக்குள் சாலையில் வலம் வர உள்ளதாக மாநகரப் பேருந்து அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கி தமிழக அரசு தரப்பில் பேருந்து சேவைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சென்னை மாநகர், புறநகர்ப் பகுதிகளில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பல்வேறு வழித்தடங்களிலும் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மீண்டும் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் பேருந்துகளில் ஒன்றான டபுள் டக்கர் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்திருக்கிறது. டபுள் டக்கர் பேருந்துகளில் பயணிக்கும் போது நகரின் அழகையும், பெரிய கட்டிடங்களையும் கூடுதலாக ரசிக்க முடியும். இந்த நிலையில் சென்னையில் 17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை கொண்டு வரப்பட உள்ளது.
இதற்கான பணிகள் 2023ஆம் ஆண்டு முதலே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மின்சாரத்தில் இயக்கப்படும் புதிய டபுள் டக்கர் பேருந்துகளை வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்குவதற்காப்ன சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அதற்கான ஒப்புதல் பெறுவதற்கான பரிந்துரைகள் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதற்கு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், பேருந்தை இயக்குவதற்கான நடைமுறைகள் தொடங்கும் என்று போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன்பாக தாம்பரம் - பிராட்வே இடையில் 18ஏ எண்ணில் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இது சாலையில் நடந்த கட்டுமானப் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டது.
டபுள் டக்கர் பேருந்துகளில் வழக்கத்தை விட கூடுதல் பயணிகள் பயணிக்கலாம் என்பதால், இது சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. அதேபோல் முதற்கட்டமாக 20 பேருந்துகள் வாங்கப்பட்டு இயக்கப்பட உள்ளது. இதனால் நகரின் பொது போக்குவரத்தில் சிறந்த மாற்றங்கள் வரும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications