தீபாவளி முடிஞ்சிட்டு.. சென்னைக்கு போறீங்களா? ஜிஎஸ்டி, ஓஎம்ஆர், ஈசிஆரில் சிக்கல்.. ரொம்ப கவனம்!
சென்னை: தீபாவளி கொண்டாட்டங்களுக்குப் பிறகு சென்னை திரும்புவோர் கனமழையை எதிர்கொள்ளும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆர்வலர்கள் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக நகரின் தெற்குப் பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
செங்கல்பட்டுக்கு தெற்கே உள்ள ஜிஎஸ்டி சாலை மற்றும் கோவளத்திற்கு அருகிலுள்ள கிழக்கு கடற்கரைச் சாலை (ECR) ஆகிய பகுதிகளில் மிக பலத்த மழை பதிவாகியுள்ளது. ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு நோக்கி நகரும் மழைப்பகுதிகள் விரைவில் தெற்கு புறநகர்ப் பகுதிகளை வந்தடையலாம்.

சென்னையின் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் உருவாகியுள்ள புயல் மேகங்கள், கனமழையைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். மேலும், திருவள்ளூர் மாவட்டத்திலும் மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டு இன்று மாலை வீட்டிற்கு திரும்புவோர் கவனமாக இருக்க வேண்டும்.
நாளை ஊருக்கு திரும்புவோர் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதோடு கார்களில் ஈசிஆர், ஜிஎஸ்டி சாலை வழியாக வருவோர் கவனமாக வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வானிலை எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
வங்கக் கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் இரட்டை வானிலை அமைப்புகளால், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கடும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றங்கள் காணப்படும். அடுத்த சில நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பரவலான, கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. கடலோர மாவட்டங்கள், குறிப்பாக சென்னை, அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழையை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதால், எச்சரிக்கையாக இருக்குமாறு IMD அறிவுறுத்தியுள்ளது.
சென்னை பருவமழை தீவிரம்
கடந்த அக்டோபர் 16 அன்று தொடங்கிய வடகிழக்கு பருவமழை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் போன்ற தென் மாவட்டங்களில் கணிசமான மழையைப் பொழிந்துள்ளது. அதேசமயம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் போன்ற வட மாவட்டங்களிலும் கனமழை பெய்து, நகர்ப்புறங்களில் நீர் தேங்க வழிவகுத்துள்ளது.
டெல்டா கடற்கரை பகுதிகளில் பரவலான மழை பெய்யும். புதுச்சேரிக்கும் டெல்டா பகுதிக்கும் இடையே மிதமான முதல் கனமழை தொடரும். இதற்கிடையில், சென்னை கடற்கரை பகுதிகளில் காலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த 1 வாரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications