மனிதாபிமானமற்றது! அமலாக்க துறை ரெய்டின்போது பெண் ஊழியர்கள் குறித்தும் கவலைப்படல- டாஸ்மாக் அதிகாரிகள்
சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இதற்கிடையே இந்த சோதனை தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் சோதனையின் போது தாங்கள் மன ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும் இது மனிதாபிமானமற்ற நடவடிக்கை என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலம் முழுக்க மதுபான வினியோகத்தை டாஸ்மாக் நிறுவனம் தான் கவனித்து வருகிறது. இதற்கிடையே டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதலில் மிகப் பெரியளவில் ஊழல் நடந்ததாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவினர் குற்றஞ்சாட்டினர். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை
இந்தச் சூழலில் தான் கடந்த 6ம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காலை 6ம் தேதி தொடங்கிய இந்த சோதனை 8ம் தேதி வரை தொடர்ந்தது. டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களைக் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
இதற்கிடையே அமலாக்கத் துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம்
மேலும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையைச் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்றும் விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளைத் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரியும் தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு விசாரித்து வந்தது.
நீதிமன்ற உத்தரவு
இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை இன்றைக்குத் தள்ளிவைத்தனர். மேலும், அதுவரை அமலாக்கத் துறை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். மேலும், எதன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்ற விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருவதாக இருந்தது. இருப்பினும், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் இருவரும் விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கை விரைவில் வேறு ஒரு அமர்வு விசாரிக்கும் என தெரிகிறது.
டாஸ்மாக் அதிகாரிகள் பிரமாண பத்திரம்
இதற்கிடையே டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர். அந்த பிரமாண பத்திரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது தாங்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலையில் மணிக்கு வந்த தங்களை நள்ளிரவு வரை அலுவலகத்திலேயே வைத்திருந்ததாகவும் நள்ளிரவில் தான் வீட்டிற்கு அனுப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது. அப்போதும் மறுநாள் சீக்கிரம் அலுவலகம் வரக் கூறியதாகவும் இதனால் மூன்று நாட்களும் தூக்கமின்றி பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். பெண் ஊழியர்கள் பலர் இருந்த நிலையில், அது குறித்துக் கவலைப்படாமல் நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற நடவடிக்கை
அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையின்போது செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டதால் வீட்டிற்கு வரத் தாமதம் ஆகும் என்பதைக் கூட குடும்பத்தினருக்குச் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சோதனை என்ற பெயரில் அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மட்டுமன்றி மனிதாபிமானமற்ற நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications