பாஜகவுக்கு எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. தவெக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்! போட்டு உடைத்த ஷபீர் அகமது
சென்னை: தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் சூழலில் அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இதற்கிடையே தேர்தல் களத்தில் அதிமுக என்ன செய்கிறது.. அதிமுக- பாஜக கூட்டணி எப்படி இருக்கிறது.. தவெக வருகை தேர்தல் களத்தில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பது குறித்து நமது ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் மூத்த ஊடகவியலாளர் ஷபீர் அகமது தெளிவாக விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் அடுத்தாண்டு மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. சில மாதங்களே இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக என எல்லாக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இதற்கிடையே தமிழ்நாடு தேர்தல் களம் தொடர்பாக மூத்த ஊடகவியலாளர் ஷபீர் அகமது நமது ஒன்இந்தியாவுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.

நம்பிக்கை
அதில் தமிழ்நாட்டில் இப்போது SIRஐ கொண்டு வந்துவிட்டனர் என்றும் இதனால் பீகாரை மாதிரி ஒரு சூழலை இங்கே உருவாக்கலாம் என்ற ஒரு நம்பிக்கையை எடப்பாடிக்கு பாஜக தரப்பிலிருந்தும் ஆர்எஸ்எஸ் தரப்பிலிருந்தும் கொடுக்கப்பட்டிருப்பதாக ஷபீர் அகமது தெரிவித்தார். மேலும், பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் தலைவர்கள் எடப்பாடியை வந்து சந்தித்துவிட்டுச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். திமுக பக்கம் ஓபிஎஸ் செல்ல வாய்ப்பு இருக்கு என்ற பேச்சுகள் எழுந்த பிறகே அமித் ஷா ஓபிஸுக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
விஜய்
தவெக குறித்த கேள்விக்கு அவர், "நியாயப்படி இப்போது தேர்தலில் திமுக vs அதிமுக என்றே இருந்திருக்க வேண்டும். ஆனால் இதில் தவெக வந்த பிறகு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. மேலும், எடப்பாடி ஒரு பக்கம் நாங்க 200 சீட்ட ஜெயிப்போம் என்கிறார். அதேநேரம் மற்றொரு பக்கம் ஒரு பிரம்மாண்டமான கூட்டணி அமைப்போம் என்கிறார். அதாவது இப்போது இருக்கும் கூட்டணி வைத்து வெல்ல முடியாது என்பதை அவரே சொல்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது" என்றார்.
கூட்டணி கணக்கு
அதிமுக பாஜக கூட்டணி குறித்துப் பேசிய அவர், "கடந்த ஏப்ரல் மாதம் அவர் பாஜக கூட்டணிக்குப் போனார். அப்படிப் போகாமல் அவர் தனித்து இருந்திருந்தால்.. திமுகவுக்கு எதிராக அதிமுக என்றே மக்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் பாஜகவுடன் கூட்டணிக்குப் போய்விட்டதால்.. மறுபடியும் பாஜக தான் இவர்களை இயக்குகிறார்கள் என்ற பிம்பத்தில் மாட்டிவிட்டார்கள். அதிமுக மீதான மக்களின் நம்பகத்தன்மை குறைந்து கொண்டே போகிறது. அவர்கள் எந்தவொரு விஷயத்திலும் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காமல் இருப்பதே இதற்குக் காரணம்.!
இந்து முன்னணி மாநாட்டிலேயே கலந்து கொள்ள ஆரம்பித்துவிட்டனர். வேறு என்ன செய்வார்கள். திருப்பரங்குன்றம் என்பது இந்து முஸ்லிம் பிரச்சனை கிடையாது.. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிலும் மத மோதல்கள் பெரிய அளவில் ஏற்பட்டதில்லை. அப்படியிருக்கும்போது அதுபோன்ற மதமோதல்களை உருவாக்கும் சூழலை வருகிறது என்றால் அதைக் கண்டித்திருக்க வேண்டும்.
பாஜகவுக்கு மெசேஜ்
மேலும், அதிமுக பொதுக்குழுவில் இந்தக் கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் எல்லாம் வர வேண்டும்.. எந்தக் கட்சிகள் வரக்கூடாது என்ற விஷயங்களை எல்லாம் நாம் தீர்மானிப்போம் என்பதைத் தீர்மானமாகவே நிறைவேற்றுகிறார்கள். அது பாஜகவுக்கு அனுப்பப்பட்ட ஒரு மெசேஜாகவே நான் பார்க்கிறேன். அதேநேரம் இதைத் தீர்மானமாகப் போடுகிறார்கள் என்றால் அதிமுக எந்த அளவுக்குப் பலவீனமாக இருக்கிறது என்ற கேள்வி வருகிறது. கூட்டணிக்கு நீங்கள் தான் தலைமை தாங்குகிறீர்கள்.. பிறகு ஏன் இந்த மாதிரி ஒரு தீர்மானத்தைப் போட்டு நீங்கள் சொல்கிறீர்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications