ஜூலை 11 வன்முறைக்கு பிறகு.. நாளை முதல்முறையாக அதிமுக அலுவலகம் செல்லும் இபிஎஸ்.. கலக்கத்தில் ஓபிஎஸ்
சென்னை: ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டத்திற்கு பின்னர் அஇஅதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி நாளை காலை முதல்முறையாக செல்கிறார்.
அதிமுக கடந்த ஜூன் மாதம் முதலே இரண்டு பட்டுள்ளது. இக்கட்சியில் பல அணிகள் பிளவு என்பது சகஜமான ஒன்றுதான். எம்ஜிஆர் இருந்த போதும் மறைந்த போதும் ஜெயலலிதா மறைந்த போது அதிமுக பிளவுப்பட்டது.
தற்போது ஒற்றை தலைமை என்ற பிரச்சினையை முன் வைத்து அதிமுக மீண்டும் பிளவுப்பட்டுள்ளது. அதிமுகவில் கூட்டுத் தலைமையே சரி என ஓபிஎஸ்ஸும் ஒற்றை தலைமையைத்தான் தொண்டர்கள் விரும்புகிறார்கள் என எடப்பாடி பழனிசாமியும் மல்லுக்கட்டி வருகிறார்கள்.

அதிமுக பொதுக் குழுக் கூட்டம்
இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பின் எதிர்ப்பை மீறி அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக் குழு நடந்த அதே நேரத்தில் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.

ஓபிஎஸ் தரப்பு
அப்போது ஓபிஎஸ் தரப்புக்கும் இபிஎஸ் தரப்புக்கும் நடந்த வன்முறையில் அங்கிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. சிலர் காயமடைந்தனர். இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் வங்கிக் கணக்குகளை கையாளும் உரிமையை வங்கி நிர்வாகம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வழங்கியது.

அலுவலக சாவி
அது போல் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்கக் கோரி ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டது. எனினும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்களும் நிர்வாகிகளும் செல்ல நீதிமன்றம் ஒரு மாதம் தடை விதித்தது.

ஓபிஎஸ்ஸுக்கு சாதகம்
இந்த தடை முடியும் தருவாயில்தான் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு எதிராக ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக உயர்நீதிமன்ற தனிநீதிபதி தீர்ப்பளித்தார். எனினும் ஓபிஎஸ்ஸோ எடப்பாடி பழனிசாமியோ தலைமை அலுவலகத்திற்கு செல்லவில்லை. இந்த நிலையில் ஜூலை 11 பொதுக குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.

இபிஎஸ்ஸுக்கு சாதகம்
அதன் மீது கடந்த வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் அதிமுக பொதுக் குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில் நாளை காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். அதாவது ஜூலை 11 ஆம் தேதி நடந்த வன்முறைக்கு பிறகு முதல்முறையாக அவர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளிக்கவுள்ளார்கள்.

ஓபிஎஸ் கலக்கம்
அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. கட்சி அலுவலகத்திற்கு செல்ல ஒரு மாதம் தடை நீங்கியதும் ஓபிஎஸ் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி செல்லவுள்ளதால் ஓபிஎஸ் கலக்கமடைந்துள்ளார் என கூறப்படுகிறது. அதிமுக பொதுக் குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications